தாமிரவருணி ஆற்றுப்படுகையில் குவாரிகளுக்கு இடைக்காலத் தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தாமிரவருணி ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகளுக்கு இடைகாலத் தடைவிதித்து

தாமிரவருணி ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகளுக்கு இடைகாலத் தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையை சேர்ந்த மகாராஜன் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே குருமண் அள்ளுவதற்காக அனுமதி பெற்றுக் கொண்டு  தாமிரவருணி ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணலை கடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நெல்லையில் குரு மண் அள்ளுவதற்கு கொடுக்கப்பட்ட  அனுமதியை ரத்து செய்து, சட்டவிரோதமாக  தாமிரவருணி  ஆற்றுப்படுகையில்  மணல் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் சவுடு மண் அள்ள அனுமதிபெற்று ஆற்று மணலை கடத்தி வருகின்றனர். எனவே பட்டா இடம், நீர் நிலைகளில், மணல் அள்ள அனுமதி அளிக்கக் கூடாது. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என காளீஸ்வரன் என்பவரும் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  சீவலப்பேரி தாமிரவருணி  ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மணல் குவாரிக்கு இடைக்காலத் தடை விதித்தனர். 
மேலும்  தாமிரவருணி  ஆற்றங்கரையில் எந்த குவாரிகளுக்கும் அனுமதி கொடுக்க கூடாது என்று உத்தரவு உள்ளது. 
இந்நிலையில் மீண்டும் எவ்வாறு குவாரிகள் அனுமதிக்கப்படுகிறது ? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தாமிரவருணி   ஆற்றுப்படுகையில்  மணல் குவாரிக்கு அனுமதி அளிக்க தடை விதித்தனர். 
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் சவுடு மண் குவாரிகளுக்கு அனுமதி வழங்க தடைவிதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் இரண்டு வாரங்களுக்கு  ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com