சுடச்சுட

    

    திருமணம், திருவிழாக்களுக்கு பயன்படுத்தும் வாகனங்களை கண்காணிக்க ஆட்சியர் உத்தரவு

    By DIN  |   Published on : 17th March 2019 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    திருமணம், காதணி விழா மற்றும் திருவிழாக்களுக்கு பயன்படுத்தும் வாகனங்களை கண்காணிக்குமாறு, பறக்கும் படை குழுவினருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
    மக்களவைத் தேர்தலுக்காக, மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் ஆட்சியர் ச. நடராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. 
    இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: நிலை கண்காணிப்புக் குழு மற்றும் தேர்தல் பறக்கும் படை குழுக்கள் 24 மணி நேரமும் வாகனச் சோதனை நடத்துவது அவசியம். குறிப்பாக, அதிகாலை 4 முதல் 5 மணி வரை தீவிர சோதனை நடத்த வேண்டும். 
    நகரின் முக்கியச் சாலைகள், கிராமப்புற சாலைகள் மற்றும் பிரதான சாலைகள் என அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும்.  அனைத்து வாகனங்களையும் எவ்வித பாரபட்சமுமின்றி சோதனைக்குள்படுத்த வேண்டும். 
    திருமணம்,  காதணி விழா மற்றும் திருவிழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும் வாகனங்களை கண்காணிப்பதும் அவசியம்.  
    நிலை கண்காணிப்புக் குழு மற்றும் தேர்தல் பறக்கும் படை குழுக்கள்  சோதனையின்போது,  பறிமுதல் செய்யப்படும் ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருள்களின் விவரங்களை உடனுக்குடன் மாவட்டத் தேர்தல் அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களை, மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பித்து, பறிமுதல் செய்யப்பட்ட தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றார். 
    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. குணாளன்,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ராஜசேகரன் (பொது), மணிமொழி (தேர்தல்), தேர்தல் பிரிவு வட்டாட்சியர் உதயசங்கர் மற்றும் நிலை கண்காணிப்புக் குழு, பறக்கும் படை குழுவினர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai