சர்க்கரை நோயாளிகளை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்கும் திட்டம் உள்ளதா? மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நாட்டில் சர்க்கரை நோயாளிகளை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்கும் திட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு

நாட்டில் சர்க்கரை நோயாளிகளை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்கும் திட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
   மதுரையைச் சேர்ந்த கேசவன் தாக்கல் செய்த மனு: 
 இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஒரு லட்சம் சிறுவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுத்தேர்வு, போட்டித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுக்குச் செல்லும் சர்க்கரை நோயால் பாதித்த மாணவர்கள் இன்சுலின், மருத்துவப் பரிசோதனை கருவி உள்ளிட்டவைகளை தேர்வு அறைக்குள் எடுத்துச்செல்ல அனுமதித்து இடைகால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 
  சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வு அறைக்கு பரிசோதனைப் பட்டை, சாக்லேட், பழங்கள், இன்சுலின் மருந்துகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ நிபுணர்கள் ஆஜராகி, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சில அத்தியாவசிய தேவைகள் உள்ளது. அவை தாமதமானால் அவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் என தெரிவித்தனர். 
   இதையடுத்து நீதிபதிகள், இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எத்தனை பேர் உள்ளனர்,  அதில் தமிழகத்தில் உள்ளவர்கள் எண்ணிக்கை எவ்வளவு,   அவர்களுக்கான போதிய மருத்துவ வசதிகள் தாலுகா மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ளனவா, சிகிச்சை அளிப்பதற்கு போதுமான மருத்துவர்கள் உள்ளனரா, தேர்வுகளின் போது சர்க்கரை நோயாளிகள் குளுக்கோ மீட்டர் கருவி கொண்டு செல்ல  அனுமதிக்கலாமா, வருங்காலங்களில் போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வுகளை எழுதச் செல்லும் சர்க்கரை நோயாளிகள் உணவு மற்றும் மருந்துப் பொருள்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கலாமா, சர்க்கரை நோயாளிகள் அதிகரித்துவரும் சூழலில் அவர்களை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்கும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பினர். 
   மேலும் இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com