பாஜக ஆட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள்: ப.மாணிக்கம் தாகூர்
By DIN | Published On : 24th March 2019 03:37 AM | Last Updated : 24th March 2019 03:37 AM | அ+அ அ- |

பணக்காரர்களுக்கும், பெரும் முதலாளிகளுக்குமான பாஜக அரசை 17 ஆவது மக்களவைத் தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள் என, காங்கிரஸ் கமிட்டி செயலரும், காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ப. மாணிக்கம் தாகூர் கூறினார்.
புது தில்லியிலிருந்து சனிக்கிழமை மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை, விருதுநகர் தொகுதி வேட்பாளராக 3 ஆவது முறையாக என்னை அறிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் நிச்சயமாக வெற்றி பெறும்.
கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் பிரதமர் மோடி அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஜிஎஸ்டி திட்டத்தை முறைப்படுத்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனடையும் வகையில் நிறைவேற்றவில்லை. பணக்காரர்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் மட்டுமே செயல்படுகின்ற பாஜக ஆட்சியை மக்கள் கண்டிப்பாக புறக்கணிப்பார்கள். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளான விவசாயக் கடன் தள்ளுபடி, உண்மையான ஜிஎஸ்டி, ஒவ்வொரு இந்தியனுக்கும் குறைந்தபட்ச உத்திரவாத வருமானத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை மக்களிடையே எடுத்துக் கூறுவோம் என்றார்.