Enable Javscript for better performance
இளம் வழக்குரைஞர்களுக்கு ஏ.ஓ.ஆர். தகுதித் தேர்வு: பார் கவுன்சில் செயலர்கள் பதிலளிக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    இளம் வழக்குரைஞர்களுக்கு ஏ.ஓ.ஆர். தகுதித் தேர்வு: பார் கவுன்சில் செயலர்கள் பதிலளிக்க உத்தரவு

    By DIN  |   Published on : 28th March 2019 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உயர்நீதிமன்ற  நடைமுறையை மேம்படுத்தும் வகையில்  (அட்வகேட் ஆன் ரெக்கார்டு) ஏ.ஓ.ஆர். எனப்படும் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோர் மட்டும்  உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணிபுரிய அனுமதிக்கக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர்,  இந்திய பார் கவுன்சில் செயலர்,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர்  பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
    மதுரையைச் சேர்ந்த கண்ணன் தாக்கல் செய்த மனு:
    சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்குகள்,  மேல்முறையீட்டு வழக்குகள்,  தேர்தல் தொடர்பான வழக்குகள் என பல முக்கிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு  உத்தரவு வழங்கப்படுகிறது. இதில் ஒரு  வழக்குரைஞர் ஆஜராகி வழக்கை நடத்த வேண்டும் என்றால் சில அடிப்படை விதிகள்,  சட்ட நடைமுறைகள் தேவைப்படுகின்றன. ஆனால் சட்டப்படிப்பு முடித்தவுடன்,  மூத்த வழக்குரைஞர்களிடம் பணியாற்றிய அனுபவம் இல்லாமல் நேரடியாக பலர் வழக்கில் ஆஜராகின்றனர். 
    அவர்கள் மூத்த வழக்குரைஞர்களிடம்   போதிய பயிற்சி பெறாமல் சிறப்பாக செயல்பட முடியாது. எனவே உயர்நீதிமன்றத்தின்,  நடைமுறையை மேம்படுத்தும் வகையில்,  உச்சநீதிமன்றத்தில் உள்ள நடைமுறைப்படி  (அட்வகேட் ஆன் ரெக்கார்டு) ஏ.ஓ.ஆர். எனப்படும் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோர் மட்டும்,  உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணிபுரிய அனுமதிக்க வேண்டும். 
    மேலும் இளம் வழக்குரைஞர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும் என்றால் அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில்  மூத்த வழக்குரைஞரிடம் பயிற்சி பெற்று இருக்க வேண்டும். அதில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள மூத்த வழக்குரைஞரிடம், கண்டிப்பாக ஓராண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். எனவே  ஏ.ஓ.ஆர். எனப்படும் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும்  உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
    இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன்,  எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
    வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளம் வழக்குரைஞர்களுக்கு இது கடுமையான நடைமுறையாக இருந்தாலும்,  உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்குரைஞர்களின் தரத்தை மேம்படுத்தவும்,  அவர்களின் நலனிற்காகவும் தகுதித் தேர்வு தேவை என்றனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர்,  இந்திய பார் கவுன்சில் செயலர்,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai