Enable Javscript for better performance
ஹெச்ஐவி ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மூத்த மகள் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஹெச்ஐவி ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மூத்த மகள் ஒப்படைப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹெச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட  விருதுநகர் பெண்ணிடம், அவரது மூத்த மகள் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டார். 
    மதுரையைச் சேர்ந்த அப்பாசாமி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விருதுநகர் பெண்ணிற்கு முறையான சிகிச்சையும் உரிய இழப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.  
    இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் மார்ச் 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விருதுநகர் பெண் ஆஜரானார்.  அவரிடம் தனியே விசாரணை நடத்திய நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பெண் அவரது மூத்த குழந்தையை பார்க்காமல் மனஅழுத்தத்தில் இருப்பது தெரிய வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது மூத்த குழந்தையை ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். 
    இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது மூத்த குழந்தை ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதிகள் தனியே விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், கணவரின் பாதுகாப்பில் இருந்த மூத்த மகள் ஹெச்ஐவி பாதித்த பெண்ணிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர். 
    மேலும் அவர்களது உத்தரவில், பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் செல்ல விருப்பமில்லை என தெரிவித்ததால், அவர் விருப்பப்படி தனது குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டில் இருக்கலாம் என்றும்  குழந்தைகளை கணவர் வந்து பார்த்து செல்வதற்கு  எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை மார்ச் 29 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

     

    குழந்தைக்கு ஹெச்ஐவி பாதிப்பில்லை
    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் செந்தில்ராஜ்,  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு பல்வேறு ரத்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் குழந்தைக்கு ஹெச்ஐவி பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளன. அந்த குழந்தைக்கு 6 மாதத்திற்கு பின்னர் மீண்டும் ரத்த பரிசோதனை நடத்தப்படும். முதல் பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்பதால் நிச்சயம் நோய் வர வாய்ப்பில்லை. இதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு சிறப்பான சிகிச்சை அளித்துள்ளது பாராட்டுக்குரியது என்றார்.
     இதுகுறித்து அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா செய்தியாளர்களிடம் கூறியது: பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் ரத்த மாதிரி முடிவுகளை தெரிவிக்கலாம் என உயரதிகாரிகள் கூறியதையடுத்து தற்போது விவரங்களை தெரிவிக்கிறோம்.  
    பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவரும், குழந்தையும் நலமுடன் உள்ளனர் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai