அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானம்: தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்குறுதி
By DIN | Published On : 28th March 2019 07:56 AM | Last Updated : 28th March 2019 07:56 AM | அ+அ அ- |

மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டால், ஊராட்சிகள் தோறும் விளையாட்டு மைதானம் அமைத்துத் தருவேன் என்று தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமார் உறுதி அளித்தார்.
தேனி மக்களவைக்கு உள்பட்ட மதுரை மாவட்டம் சோழவந்தான் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த குமாரம், கோட்டை மேடு, கல்லணை, வலசை, மேட்டுப்பட்டி, பெரியஊர்சேரி, தேவசேரி, முடுவார்பட்டி, சரந்தாங்கி, பாரப்பட்டி, சேந்தமங்கலம், பாலமேடு, சத்திரவெள்ளாலபட்டி, வலையபட்டி, புதூர், தெத்தூர், எர்ரம்பட்டி, அய்யூர், குட்டிமேக்கிபட்டி, கோவிலூர், கல்வேலிப்பட்டி, தனிச்சியம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரத்தில் புதன்கிழமை ஈடுபட்டார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.பார்த்திபன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.டி.கே. ஜக்கையன், கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், அதிமுக அமைப்புச் செயலர் முத்துராமலிங்கம் ஆகியோர் வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தனர்.
இந்த பிரசாரத்தின்போது வேட்பாளர் பேசியது:
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, அப்போதைய மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸும், கூட்டணியில் அங்கம் வகித்த திமுகவும் முட்டுக்கட்டை போட்டன. ஆனால், அதிமுக தொடர்ந்து போராடி தமிழர்களின் வீர விளையாட்டை மீட்டெடுத்துள்ளது.
அதேபோல, முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் மத்திய காங்கிரஸ் அரசும்-திமுகவும் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தன. அப்போது அமைச்சரவையில் இருந்தவரும், தற்போதைய காங்கிரஸ் வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எந்தவொரு அழுத்தமும் கொடுக்கவில்லை.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக் காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இதன் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது.
மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டால், இப் பகுதி விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வேன். இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தித் தருவேன். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...