பாலியல் வன்கொடுமை இல்லாத இந்தியா: வேட்பாளர்களிடம் கையெழுத்து இயக்கம்

பாலியல் வன்கொடுமை இல்லாத நாட்டை உருவாக்க மக்களவை தொகுதி வேட்பாளர்களிடம் கையெழுத்து

பாலியல் வன்கொடுமை இல்லாத நாட்டை உருவாக்க மக்களவை தொகுதி வேட்பாளர்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை கைலாஸ் சத்தியார்த்தி குழந்தைகள் அமைப்பும், நீட்ஸ் அமைப்பும் இணைந்து  தொடங்கியுள்ளன.
 மதுரையில் "நிதி ஆயோக்' நிலைக் குழு உறுப்பினர் ஜே. பால் பாஸ்கர், கைலாஸ் சத்யார்த்தி குழந்தைகள் அமைப்பின் நிர்வாகி ராமன் சாவ்லா, வன்கொடுமை இல்லாத இந்தியா அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி. ராஜகோபால், சமூக ஆர்வலர் உமாசங்கர் ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: 
 தேசிய குற்றப்பதிவேடு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 2014-இல் நாடு முழுவதும் 36,735 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளில் ஈடுபட்டதாக 3,37,972 வழக்குகள் பதிவாகி உள்ளன. 
 தமிழகத்தை பொருத்தவரை 455 பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 6,325 வன்கொடுமை வழக்குகளும் பதிவாகி உள்ளன. நாடு முழுவதும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்றச்சூழல் உள்ளது. இவற்றை தடுப்பது தொடர்பாக மத்திய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. 
 எனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை களைவது, பாலியல் வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவை உருவாக்குவது என்ற கருத்தை மையமாக வைத்து இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறோம். 
 அதன் ஒரு பகுதியாக மக்களவைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமும் உறுதிமொழி கையெழுத்து பெறப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள மக்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான புதிய சட்டங்களை உருவாக்குவது, மத்திய நிதி நிலை அறிக்கையில் பெண்கள் பாதுகாப்புக்கு 10 சதவிகிதம் நிதி ஒதுக்குவது போன்றவற்றுக்கு உறுதுணையாக இருப்பதாக  வேட்பாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் உள்பட 17 பேர் கையெழுத்திட்டுள்ளன.  2022-க்குள் வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவை உருவாக்க மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அரசின் செயல்திட்டங்கள் வடிவம் பெறும் வரை பிரசாரம் தொடர்ந்து நடைபெறும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com