முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மழை வேண்டி வைகையாற்றில் மே 31இல் இசை ஆராதனை
By DIN | Published On : 15th May 2019 06:40 AM | Last Updated : 15th May 2019 06:40 AM | அ+அ அ- |

மதுரையில் மழை பெய்ய வேண்டி அரசு இசைக்கல்லூரி சார்பில் வைகையாற்றில் இசை ஆராதனை நிகழ்ச்சி மே 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவ மழை போதுமான அளவு பெய்யாததால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோடை மழையும் பெய்யவில்லை. இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மழை பெய்வதற்காக இந்து அறநிலையத்துறைக்குள்பட்ட ஆலயங்களில் வருண ஜெபம் நடத்துமாறு அறநிலையத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதன்பேரில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் உள்பட சில கோயில்களில் வருண ஜெபம் நடத்தப்பட்டது. இந்நிலையில் மதுரையில் மழை பெய்ய வேண்டி வைகையாற்றில் இசை ஆராதனை நடத்தப்பட உள்ளது.
மதுரை அரசு இசைக்கல்லூரி சார்பில் மே 31-ஆம் தேதி இந்த இசை ஆராதனை நடத்தப்படுகிறது. மதுரை ஆழ்வார்புரம் வைகையாற்றில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் நடைபெற உள்ள இசை ஆராதனை நிகழ்ச்சியில், அரசு இசைக்கல்லூரி முதல்வர் டேவிட், இசை ஆசிரியை சாவித்ரி மற்றும் இசைக்கல்லூரி பேராசிரியர்கள், இசை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சியில் மிருதங்கம், வயலின், வீணை உள்ளிட்ட அனைத்து வகை இசைக்கருவிகளையும் பயன்படுத்தி இசை ஆராதனை நடைபெறுகிறது. முதலில் கணபதி ஸ்துதியும், அடுத்ததாக மீனாட்சி பிள்ளைத்தமிழ் இசையையும் தொடர்ந்து மழையைத் தருவிக்கும் அமிர்த வர்ஷினி ராகம், வருணப்பிரியா ராகம் ஆகியவற்றை அனைவரும் மீட்டுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அரசு இசைக்கல்லூரி நிர்வாகம் செய்து வருகிறது.