சுயேச்சை வேட்பாளருக்கு போலீஸ் பாதுகாப்பு
By DIN | Published On : 15th May 2019 06:40 AM | Last Updated : 15th May 2019 06:40 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு சிலர் கொலைமிரட்டல் விடுத்ததால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லபாண்டி சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு செல்லிடப்பேசியில் திங்கள்கிழமை இரவு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்ததாம். இதுகுறித்து செல்லப்பாண்டி அவனியாபுரம் போலீஸாரிடம் புகார் அளித்ததன்பேரில், தேர்தல் வரை அவருக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், அரவக்குறிச்சியில் பிரசாரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
இது அவரை பின்பற்றும் இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் தரப்பிலும் எதிரொலிக்கக் கூடும். எனவே, சீமான் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாரிடம் புகார் அளித்தேன்.
இதனால் திங்கள்கிழமை நள்ளிரவிலிருந்து எனது செல்லிடப்பேசியில் நாம்தமிழர் நிர்வாகிகள் சிலர் கொலைமிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்தப் புகாரின்பேரில் தேர்தல் முடியும் வரை எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.