பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு: ஆயுள்தண்டனையை உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்
By DIN | Published On : 15th May 2019 06:43 AM | Last Updated : 15th May 2019 06:43 AM | அ+அ அ- |

பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மேல்முறையீடு செய்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உறுதிசெய்தது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித். முன்னாள் நகர்மன்ற உறுப்பினரான இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த காசிநாதன் மனைவி சங்கீதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சங்கீதாவை, தன்னுடன் சேர்ந்து வாழும்படி இந்திரஜித் கூறியுள்ளார். இதற்கு சங்கீதா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இந்திரஜித், 2015 ஆம் ஆண்டு சங்கீதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில் சங்கீதா இறந்தார். இதுகுறித்து கும்பகோணம் போலீஸார் வழக்குப்பதிந்து, இந்திரஜித்தை கைது செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த தஞ்சாவூர் 2 ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திரஜித்திற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து இந்திரஜித், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து, கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G