உதவிப் பேராசிரியர்கள் சிறப்பு கல்வித் தகுதி பெற 3 ஆண்டுகள் அவகாசம் தேவை: தமிழ்நாடு கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

தமிழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் சிறப்புக் கல்வித் தகுதியை

தமிழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் சிறப்புக் கல்வித் தகுதியை பூர்த்தி செய்ய  3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என கல்லூரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உறுப்புக் கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:  
நாடு முழுவதும் இயங்கி வரும் அரசுக் கல்லூரிகள், அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு  "செட்' அல்லது "நெட்' தகுதித்தேர்வு அல்லது முனைவர் பட்டம் ஆகியவற்றை சிறப்புக் கல்வித்தகுதியாக பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. 
ஆனால்,  தமிழகத்தில் குறிப்பாக சுயநிதிக் கல்லூரிகளிலும்,  பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலும்,  "ஷிப்ட்' முறையில் இயங்கி வரும் அரசுக் கல்லூரிகளிலும் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 50 சதவிகிதத்துக்கும் மேலான ஆசிரியர்கள் சிறப்புக் கல்வித்தகுதியை பூர்த்தி செய்யவில்லை.
இந்நிலையில் வரும் கல்வியாண்டில் இருந்து பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதியை பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே கல்லூரிகளில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. 
இதையடுத்து அனைத்து பல்கலைக்கழகங்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்குமாறு இணைப்புக் கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.  
கல்லூரிகளில் பல அறிவியல் துறைகள் மற்றும் கணினிப் பாடங்களுக்கும் முனைவர் ஆய்வு வழிகாட்டிகள் மிகக்குறைவாக உள்ளதால், பல கல்லூரி ஆசிரியர்களால் முனைவர் ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை.  சுயநிதி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மிகக்குறைவான ஊதியத்திலேயே பணிபுரிந்து வருவதால் போதிய நிதி வசதி இன்றி தகுதித்தேர்வுக்கு தயாராக முடியாமலும், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள முடியாமலும் உள்ளனர்.
மேலும் சுயநிதி கல்லூரிகளிலும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலும்  முனைவர் பட்டம் பெற்று  பல ஆண்டுகளாக ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களை முனைவர்  பட்ட வழிகாட்டியாக பல்கலைக்கழகங்கள் அங்கீகரிக்காததால், போதுமான ஆய்வு வழிகாட்டி இன்றி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். 
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தினால் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் மூடப்படும் சூழல் ஏற்படுவதோடு, லட்சக்கணக்கான  மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் கருத்தில்கொண்டு தமிழக அரசின் உயர்கல்வித்துறை உடனடியாக நீதிமன்றத்தை அணுகி,  உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கு முன் ஏற்கெனவே பணியில் உள்ள பேராசிரியர்கள் கௌரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு கல்வித்தகுதியை பூர்த்தி செய்ய குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும். 
சுயநிதி மற்றும் உறுப்புக்கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்களுக்கு முனைவர் பட்ட வழிகாட்டி அங்கீகாரத்தை வழங்க 
வேண்டும். 
மேலும் மத்திய அரசு 6 மாதங்களுக்கு ஒரு முறை நெட் தேர்வு நடத்துவதை போல தமிழக அரசும்  "செட்' தேர்வை நடத்த வேண்டும். கல்லூரிகளில் புதிதாக பணி நியமனம் நடைபெறும் போது பல்கலைக்கழக மானியக்குழு தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com