தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: மு.க. ஸ்டாலின்
By DIN | Published On : 16th May 2019 07:18 AM | Last Updated : 16th May 2019 07:18 AM | அ+அ அ- |

மத்தியிலும், மாநிலத்திலும் மே 23-ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் பா. சரவணனை ஆதரித்து மதுரையை அடுத்த விரகனூர் கோழிமேடு, புளியங்குளம், சிலைமான் ஆகிய இடங்களில் புதன்கிழமை ஸ்டாலின் திண்ணைப் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு பணியாற்றக் கூடிய ஒரே இயக்கம் திமுக மட்டுமே. ஆனால், அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலைக் கூட நடத்த முடியாமல் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததால், அடிப்படை வசதிகளுக்கான திட்டங்கள் தேக்கமடைந்துள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் மகளிர் நலனை கருத்தில் கொண்டு சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இப்போது மகளிர் குழுக்கள் எங்கே இருக்கின்றன என்றே தெரியவில்லை. திமுக ஆட்சியில் இருந்ததைப் போல, கேபிள் கட்டணம் ரூ. 100 ஆகக் குறைக்கப்படும். 5 பவுன் வரையிலான நகைக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
மத்தியில் கடந்த 5 ஆண்டுகளாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால், மக்களை பற்றி அக்கறையில்லாத பிரதமரைப் போல நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்துக்கு பிரதமர் ஆறுதல் கூறவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட வராத பிரதமர், ஒடிசாவில் மட்டும் புயல் பாதித்த இடங்களைப் பார்வையிடுகிறார்.
திமுக கூட்டணிக்கு தற்போது சட்டப்பேரவையில் 97 உறுப்பினர்கள் உள்ளனர்.
இடைத்தேர்தலில் 22 இடங்களில் வெற்றி பெறுவதன் மூலம் திமுக ஆட்சி அமைப்பது உறுதி. ஆகவே, மே 23-ஆம் தேதிக்குப் பிறகு மத்தியில் பாஜக ஆட்சி மட்டுமல்ல, தமிழகத்தில் அதிமுக ஆட்சியும் இருக்காது என்றார்.
திமுக துணைப் பொதுச் செயலர் ஐ. பெரியசாமி, மதுரை புறநகர் மாவட்டச் செயலர்கள் பி.மூர்த்தி, மு.மணிமாறன், மதுரை மாநகரப் பொறுப்புக் குழுத் தலைவர் கோ. தளபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோழிமேடு, புளியங்குளம், சிலைமான் பகுதியில் திண்ணைப் பிரசாரம் செய்தபோது, சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் அதிகம் பேர் ஸ்டாலினுடன் சுயபடம் (செல்ஃபி ) எடுத்துக் கொண்டனர். புளியங்குளத்தில் வீதிவீதியாகச் சென்று ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.