திருப்பரங்குன்றம் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு: 37 பேர் போட்டி

திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெறுகிறது. அதிமுக, திமுக, அமமுக கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 37 பேர் போட்டியிடுகின்றனர்.
திருப்பரங்குன்றம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே. போஸ் இறந்ததையடுத்து இத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஏ.கே. போஸ் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த காரணத்தால், திருப்பரங்குன்றம் தொகுதியின் இடைத்தேர்தலானது ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படவில்லை. இந்நிலையில், அந்த வழக்கு நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டதையடுத்து தற்போது தேர்தல் நடத்தப்படுகிறது.
37 வேட்பாளர்கள் போட்டி...: இங்கு அதிமுக சார்பில் எஸ். முனியாண்டி (இரட்டை இலை),   திமுக சார்பில் பா.சரவணன் ( உதயசூரியன்),  மக்கள் நீதி மய்யம் சார்பில்  சக்திவேல் ( டார்ச் லைட்), அனைத்து மக்கள் புரட்சி கட்சி சார்பில் ஜெ.செந்தில்ராஜா (ஒலி வாங்கி),  தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பொ. செல்லப்பாண்டியன் (புட்டி),  ஊழல் ஒழிப்பு செயலாக்கக் கட்சி சார்பில் ஏ.தேவசகாயம் (பலாப்பழம்), இந்திய குடியரசுக் கட்சி சார்பில் பூ.நாகராஜா  (மோதிரம்), நாம் இந்தியர் கட்சி சார்பில் ம.முத்து (ஆட்டோ ரிக்ஷா),  நாம் தமிழர் கட்சி சார்பில் ரா.ரேவதி (கரும்பு விவசாயி) ஆகியோர் போட்டியிடுகின்றனர். 
சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள்:  ஸ்ரீராமச்சந்திரன் (ஏழுகதிர்களுடன் பேனாவின் முனை),  எஸ்.ஆறுமுகம் (கப்பல்),  ஆர். ஆறுமுகம் (கைப்பெட்டி),  உக்கிரபாண்டியன் (டிராக்டர் இயக்கும் உழவன்),  கோபாலகிருஷ்ணன் (தென்னந்தோப்பு),   கோபிநாத் (பிரஷர் குக்கர்),  சந்திரகாசன் (மின் கம்பம்),  சரவணன் யாதவ்  (எரிவாயு  சிலிண்டர்),  சிவா (தர்பூசணி),   சுப்பிரமணி (உறை),  சேகர் (கப் மற்றும் சாசர்),  நா.நாகராஜன் (சாவி),  ப. நாகராஜ் ( வைரம்),  பத்மராஜன் (பலூன்),  பூவநாதன்  (படகோட்டியுடன் கூடிய பாய்மரப்படகு),   பொன்ராஜ்  (மடிக்கணினி),  ஐ.மகேந்திரன் (அமமுக) - பரிசு பெட்டகம்),  கே மகேந்திரன் (அலமாரி),  ஆ.மணி  ( பானை), மணிகண்டன் (உணவு நிறைந்த தட்டு),  மன்னன் (தொப்பி), முருகன்  (பட்டாணி),   கு.முனியாண்டி ( டிஷ் ஆன்டனா),  கோ. முனியாண்டி ( ஷூ )   மூ. முனியாண்டி (ரப்பர் முத்திரை), ரமேஷ்  (அன்னாசி),  ராஜன் (செங்கல்),  வைர சீமான் - ( தொலைக்காட்சிப் பெட்டி).
297 வாக்குச்சாவடிகளில்...: திருப்பரங்குன்றம் தொகுதியில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 478 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 533 பேர் ஆண்கள். 1 லட்சத்து 53 ஆயிரத்து 918 பேர் பெண்கள். 27  பேர் மூன்றாம் பாலினத்தவர். இடைத் தேர்தலையொட்டி தொகுதியில் மொத்தம் 297 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான 88 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் நியமிக்கப்படுகின்றனர். மேலும் வெப் கேமராவில் வாக்குப்பதிவு காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன.
 தேர்தல் பணியில் 1500 பேர்...: வாக்குப்பதிவு பணிக்காக வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 1500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 அல்லது 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள்...:  நோட்டாவுடன் சேர்த்து மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (பேலட் யூனிட்) தயார் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com