மே 23-க்கு பின்னர் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் அகற்றப்படுவர்: உதயநிதி ஸ்டாலின்

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் மூலமாக மக்கள் விரோத ஆட்சியாளர்கள்  ஆட்சியில்

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் மூலமாக மக்கள் விரோத ஆட்சியாளர்கள்  ஆட்சியில் இருந்து அகற்றப்படுவர் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
திருப்பரங்குன்றம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் பா.சரவணனை ஆதரித்து விரகனூர், ஐராவதநல்லூர், சிந்தாமணி, அனுப்பானடி, வில்லாபுரம், அவனியாபுரம், பெருங்குடி, வலையபட்டி, பெரிய ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது: திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுகவுக்கு எழுச்சி அதிகமாக இருக்கிறது. மக்களவைத் தேர்தலின் மூலமாக  நாட்டுக்கு "வில்லனாக' இருப்பவர் அனுப்பி வைக்கப்பட உள்ளார். 22 பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் மூலமாக தமிழகத்தின் வில்லனாக இருப்பவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார். ஆகவே, மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் மூலமாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதி.கடந்த 2016-இல் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு யாரும் வாக்களிக்கவில்லை. அவர் குறுக்கு வழியில் முதல்வர் பதவிக்கு வந்திருக்கிறார்.  
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படும். தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதைப் போல, கல்விக் கடன், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். வரும் ஜூன் 3-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்பார் என்றார்.
திருப்பரங்குன்றம்: தோப்பூர், வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, தனக்கன்குளம் திருநகர் உள்ளிட்ட  பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை  பிரசாரம் செய்தார். முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட செயலர்கள் மு.மணிமாறன், பி.மூர்த்தி, மாவட்ட துணைச்செயலர் பாலாஜி, பகுதி செயலர் உசிலை  சிவா, இளைஞரணி துணை அமைப்பாளர் விமல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com