மேலவளவு போலீஸ்காரர் மகன் கொலை வழக்கில் பாட்டி கைது
By DIN | Published On : 18th May 2019 06:54 AM | Last Updated : 18th May 2019 06:54 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் மேலூர் அருகே போலீஸ்காரர் மகன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது பாட்டியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மேலூர் அருகேயுள்ள மேலவளவு கிராமத்தை ச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ராவணன் மகன் ராஜா, கடந்த 14 ஆம் தேதி இரவு அவரது வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவரது மனைவி, குழந்தைகள் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த நிலையில் ராஜாவை கொலை செய்தது யார் என மேலவளவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ராஜா தனது மனைவி குழந்தைகளை குடிபோதையில் துன்புறுத்தியதும், தனது பாட்டி புத்திசிகாமணியிடம் (72) பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததும் தெரியவந்தது.
கொலை நடந்த இரவு புத்திசிகாமணி அந்த பகுதிக்கு வந்துசென்றது தெரியவந்ததால் அவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது பேரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
ராஜா தனது சொத்துக்களை விற்று பணம் தருமாறு துன்புறுத்தியதால், அரிவாள் மனையால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக போலீஸாரிடம் அவர் தெரிவித்தார். அவரை போலீஸார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.