மேலூர் அருகே ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் மர்மச் சாவு: வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்
By DIN | Published On : 18th May 2019 06:53 AM | Last Updated : 18th May 2019 06:53 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் விபத்தில் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மேலூரைச் சேர்ந்த பொற்கொடி தாக்கல் செய்த மனு: கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அப்போதைய வண்ணான்பாறைப்பட்டி ஊராட்சித் தலைவராக இருந்த முருகனை எதிர்த்து போட்டியிட யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், எனது கணவர் பிச்சை அப்பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இதை விரும்பாத முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சேர்ந்த ரமேஷ், காமேஷ், லோகு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுவை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டினர். இதையடுத்து, எனது கணவர் வேட்பு மனுவை திரும்பப் பெற்றார்.
இந்நிலையில், மேலூர்-சிவகங்கை சாலையில் 2011 அக்டோபர் 1-ஆம் தேதி இறந்து கிடந்தார். அது விபத்து இல்லை, திட்டமிட்டு நடந்த கொலை என கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பிச்சை உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கீழவளவு காவல் துறையினர் வழக்கை முறையாக விசாரிக்காமல் குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, இந்த வழக்கு விசாரணை முறையாகவும், நேர்மையாகவும் நடைபெற சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, கீழவளவு காவல்துறையினர் வழக்கு விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டு வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.