வசந்த உற்சவம் நிறைவு: திருப்பரங்குன்றத்தில் இன்று வைகாசி விசாகம்
By DIN | Published On : 18th May 2019 06:50 AM | Last Updated : 18th May 2019 06:50 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்சவ விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. பக்தர்கள் பால்குடம் எடுக்கும் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
கடந்த 9 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினமும் இரவு 7 மணியளவில் சுவாமி தெய்வானையுடன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவின் 9 ஆம் நாளான வெள்ளிக்கிழமை சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் 10 ஆம் நாளான சனிக்கிழமை வைகாசி விசாக திருவிழா நடைபெறுகிறது.
சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு பக்தர்கள் கொண்டுவரும் பால் கொண்டு காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் பால்குடம், பறவைகாவடி உள்ளிட்ட தங்களது நேற்றிகடனை செலுத்த வருவர்.