ஆரப்பாளையம் பேருந்து நிலையப் பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 20th May 2019 07:31 AM | Last Updated : 20th May 2019 07:31 AM | அ+அ அ- |

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையப் பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளிலுள்ள திண்டுக்கல், திருப்பூர், சேலம், கோவை செல்லும் பயணிகள் இந்த பேருந்து நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆரப்பாளையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் மாடுகள் வளர்ப்பவர்கள் தங்களின் மாடுகளை வைகை ஆற்றில் மேய்ச்சலுக்கு விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அண்மையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், ஆற்றுக்கள் புற்கள், செடி, கொடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன. கோடைகால தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால், இப்பகுதியில் வழக்கத்துக்கும் அதிமாக மாடுகளை ஆற்றுக்குள் மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.
இந்த மாடுகள், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்குள்ளும் வலம் வருவதால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சமடைகின்றனர். மேலும், பேருந்து நிலையம் மற்றும் அப்பகுதியிலுள்ள உணவகங்களில் எஞ்சிய உணவுகள், வாழை இலைகளை உணவக ஊழியர்கள் ஆற்றங்கரையோரமுள்ள குப்பைத் தொட்டிகளில் கொட்டுகின்றனர். இதை உண்பதற்காக மாடுகள், மாலையில் கூட்டம் கூட்டமாக சாலையில் திரிகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலைகளும் தொடர்கின்றன.
எனவே, வைகை ஆற்றுக்குள் மேய்ச்சலுக்கு மாடுகளை விடுவதைத் தடுக்கவும், ஆரப்பாளையம் பகுதியில் உள்ள உணவகங்களில் இருந்து உணவு மற்றும் இலைகளை முறையாக அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வாகன ஓட்டிகள், பயணிகள் வலியுறுத்துகின்றனர்.