திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: காவல் நிலையத்திலிருந்து முகவர்களை மீட்ட திமுக எம்.எல்.ஏ.
By DIN | Published On : 20th May 2019 07:30 AM | Last Updated : 20th May 2019 07:30 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
நீண்ட வரிசையில் பெண்கள்: மதுரையை அடுத்த பசுமலை மேல்நிலைப் பள்ளி, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, என்.கே. குப்பய்யன் ரத்னாமணி மழலையர் பள்ளி உள்ளிட்ட பல்வேறு வாக்குச் சாவடிகளில் காலையிலேயே பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். பல வாக்குச் சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் ஆர்வத்துடன் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலிகள் மற்றும் பிரத்யேக சாய்வு தளம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இளம் வயதினருக்கு சவால் விடும் வகையில் முதியவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்க வந்திருந்தனர்.
பசுமலை மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்த 91 வயது மூதாட்டி ஞானம்மாள், 85 வயது இயேசு பிள்ளை ஆகியோர் குடும்பத்தினர் உதவியுடன் வாக்களித்தனர்.
தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு வாக்குச் சாவடியிலிருந்து வெளியே வந்த ஞானம்மாள், ஜனநாயகக் கடமை ஆற்றுவதற்காக வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். வெற்றி பெறுபவர்கள் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வாக்காளர்கள் காத்திருக்க பந்தல்: கோடை வெயில் கடுமையாக உள்ள நிலையில், வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதற்காக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பந்தல் நிழலில் நின்று வாக்களித்தாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதேபோல், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.
கட்சியினர் வாக்குவாதம்: பெருங்குடி, தனக்கன்குளம் பகுதிகளில் வாக்குச் சாவடிகள் முன்பாக அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதற்கு, திமுக உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், அப் பகுதிகளில் அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், அவர்களை அப்புறப்படுத்தினர்.
முகவர்களை மீட்ட திமுக எம்.எல்.ஏ.: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அயன்பாப்பாகுடி 149 ஆவது எண் வாக்குச் சாவடியில், திமுக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் சாருஹாசன் என்பவரின் முகவர்களான பாலாஜி (23), கார்த்திக் (21) ஆகிய இருவரும் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மீண்டும் வாக்குச் சாவடிக்கு வந்துள்ளனர்.
அப்போது, அவர்களது அடையாள அட்டையில் அரசு முத்திரை இல்லையாம். உடனே சந்தேகத்தின்பேரில், அவனியாபுரம் போலீஸார் இருவரையும்
காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த திமுக தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலரும், மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், திமுக மாவட்டப் பொறுப்பாளர் கோ. தளபதி உள்ளிட்ட அக் கட்சியினர், அவனியாபுரம் காவல் நிலையம் சென்றனர். அங்கு, அடையாள அட்டையில் முத்திரையிடாதது தேர்தல் அலுவலரின் தவறு என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதை அடுத்து, முகவர்கள் இருவரையும் போலீஸார் விடுவித்தனர்.
மேலும், இது குறித்து தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளரிடம் புகார் அளிக்க உள்ளதாக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இந்நிலையில், காவல் நிலையம் முன்பாக 40-க்கும் மேற்பட்ட திமுகவினர் கூடியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
துணை ராணுவத்தினர் பாதுகாப்பு: திருப்பரங்குன்றம் தொகுதியில் 88 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டிருந்தன. என்.கே.குப்பயன் ரத்னாமணி மழலையர் தொடக்கப் பள்ளி, பெருங்குடி அரசு உயர்நிலைப் பள்ளி, விராதனூர் ஊராட்சி தொடக்கப் பள்ளி உள்ளிட்ட பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த வாக்குச் சாவடிகளுக்கு வந்தவர்களிடம் உரிய அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப் இருக்கிறதா என்ற சோதனைக்குப் பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இது வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தொகுதி முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், ஆங்காங்கே சிறு, சிறு வாக்குவாதம் தவிர பெரிய பிரச்னைகள் ஏதும் இல்லாமல், வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றதாகப் போலீஸார் தெரிவித்தனர்.