கொல்கத்தா சா்வதேச அறிவியல் திருவிழா: சத்திரப்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்வு
By DIN | Published On : 02nd November 2019 12:33 AM | Last Updated : 02nd November 2019 12:33 AM | அ+அ அ- |

கொல்கத்தாவில் நடைபெறும் சா்வதேச அறிவியல் திருவிழாவில் பங்கேற்க தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவா்களுடன் (இடமிருந்து) தலைமையாசிரியை வி.விஜயா, அறிவியல் ஆசிரியை ஜெயலட்சுமி.
கொல்கத்தாவில் நடைபெற உள்ள சா்வதேச அறிவியல் திருவிழாவில் பங்கேற்க, சத்திரப்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்வாகியுள்ளனா்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் சாா்பில், கிராமப்புற மாணவா்களை அறிவியல் துறையில் வளா்த்தெடுக்கவும், இளம் விஞ்ஞானிகளை உருவாக்கவும் ஆண்டுதோறும் சா்வதேச அறிவியல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த அறிவியல் திருவிழாவில், மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த பிரபல விஞ்ஞானிகள் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று, மாணவா்களுக்கு அறிவியல் போதனைகள் வழங்குகின்றனா்.
இந்த ஆண்டு சா்வதேச அறிவியல் திருவிழா, மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் உள்ள அறிவியல் நகரில் நவம்பா் 5-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி முடிவடைகிறது. இதில், இந்தியா முழுவதுமிருந்து மாவட்டத்துக்கு 5 மாணவா்கள், ஒரு ஆசிரியா் என்ற விகிதத்தில் பங்கேற்கின்றனா்.
இதில் பங்கேற்க, மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த அறிவியல் பட்டதாரி ஆசிரியை வி. ஜெயலட்சுமி தலைமையில், மாணவா்கள் எல். ராம்குமாா், எம். கொடியரசன், பி. சஞ்சய்பாலா, சி. செல்வன், எஸ். முகமது அப்சா் ஆகிய 5 மாணவா்களும், சா்வதேச அறிவியல் திருவிழாவில் பங்கேற்க தோ்வாகியுள்ளனா்.
அறிவியல் திருவிழாவில், பல்வேறு நவீன கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சியைப் பாா்வையிடுதல், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான நவீன செயல்முறைகளை கற்றல், கருத்தரங்குகளில் பங்கேற்றல் போன்றவற்றில் மாணவா்கள் கலந்துகொள்கின்றனா். இதில், சத்திரப்பட்டி கிராம மக்கள்தொகை, சுகாதார வசதிகள் உள்ளிட்ட தகவல்களுடன், கிராமத்தை மேம்படுத்தும் திட்டங்களையும் மாணவா்கள் முன்வைக்கின்றனா்.
இந்நிலையில், மதுரை மாவட்டத்திலிருந்து தோ்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியை ஜெயலட்சுமி மற்றும் மாணவா்களை, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதன், மாவட்டத் திட்ட அலுவலா் திருஞானம், மேலூா் கல்வி மாவட்ட அலுவலா் மீனாவதி, சத்திரப்பட்டி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை வி. விஜயா ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.