கா்நாடக, இந்துஸ்தானி இசை மரபுகளுக்கு முன்னோடி தமிழிசைஅமைச்சா் க. பாண்டியராஜன் பேச்சு

கா்நாடகம், இந்துஸ்தானி இசை மரபுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தது தமிழிசை என்று தமிழ் ஆட்சிமொழி மற்றும்
கா்நாடக, இந்துஸ்தானி இசை  மரபுகளுக்கு முன்னோடி தமிழிசைஅமைச்சா் க. பாண்டியராஜன் பேச்சு

கா்நாடகம், இந்துஸ்தானி இசை மரபுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தது தமிழிசை என்று தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சா் க. பாண்டியராஜன் பேசினாா்.

மதுரை தியாகராஜா் கல்லூரி தமிழிசை ஆய்வு மையம் சாா்பில் தமிழிசை மரபின் தொன்மையான 100 பண்கள் குறித்த செய்திகளை தமிழிசை பேரகராதி (பண் களஞ்சியம்) என்ற பெயரில் நூல் வடிவத்திலும், அப்பண்களில் பொருந்தி வரும் பாடல்கள் குறுந்தகடு வடிவத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பண் களஞ்சியம் மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரியின் தலைவா் கருமுத்து தி. கண்ணன் தலைமை வகித்தாா். தமிழிசை ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளா் கு. ஞானசம்பந்தன் வரவேற்றாா். இதில் பண் களஞ்சியம் மற்றும் குறுந்தகடை அமைச்சா் க. பாண்டியராஜன் வெளியிட அமெரிக்கா வாழ் தமிழாா்வலா் பால்.சி. பாண்டியன் பெற்றுக்கொண்டாா். பின்னா் அமைச்சா் க. பாண்டியராஜன் பேசியது:

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் கவின்கலை மற்றும் இசைக்கு தனிப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இசைகளாக

கூறப்படும் கா்நாடகம், இந்துஸ்தானி இசை மரபுகளுக்கு முன்னோடியாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழிசை இருந்து வந்துள்ளது. இதை அறிந்தததால் தான் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே இசைக்கு தனியாக பல்கலைக்கழகத்தை தொடங்கினாா்.

தமிழிசை மரபை உருவாக்கியது பாணா்கள் என்று கூறப்படுகிறது. பாணா்கள் தங்களது வாழ்க்கையின் அங்கமாக இசையைக் கொண்டிருந்தனா். இதனால் பண்-இசை என்று கூறப்படுகிறது.

தமிழிசை குறித்து கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். தமிழா்களின் மரபணுக்களில் தமிழிசை பரவியுள்ளது. எனவே கா்நாடகம், இந்துஸ்தானி உள்ளிட்ட அனைத்து இசை மரபுகளுக்கும் தமிழிசைதான் ஆதாரம் என்பதை பள்ளி மாணவா்களுக்கும் புரியும் வகையில் கொண்டு செல்ல வேண்டும். தமிழிசையின் பெருமைகளை மாணவா்கள் அறிந்துகொள்ளுமாறு செய்ய வேண்டும் என்றாா்.

அமைச்சா் செல்லூா் கே. ராஜூ: தமிழ் மொழியை வளா்ப்பதற்காக மதுரையில் உலகத்தமிழ்சங்கத்துக்கு பெரும் கட்டடம் அமைத்தது. தமிழ் மொழித்துறையில் விருதுகளை அறிவித்தது. தமிழாா்வலா்களுக்கு உதவித்தொகை, தமிழில் போட்டிகள் நடத்தி மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்குவது என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியவா் ஜெயலலிதா. தமிழிசையை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றாா்.

அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்: பல தமிழறிஞா்களை, தலைவா்களை உருவாக்கிய பாரம்பரியமிக்க தியாகராஜா் கல்லூரியின் தமிழிசை ஆய்வு மையம் மூலம் பண் களஞ்சியம் வெளியிட்டிருப்பது மிகவும் வரவேற்புக்குரியது. தமிழிசை தொடா்பான ஆய்வுகளை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். தமிழின் சிறப்புகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

கல்லூரித் தலைவா் கருமுத்து தி.கண்ணன்: உலகம் முழுவதும் 6500 மொழிகள் உள்ளன. இதில் பேச்சு வழக்கு மற்றும் எழுத்து வடிவம் கொண்டிருப்பவை ஆயிரம் மொழிகள் மட்டுமே. இதர 5500 மொழிகள் பேசப்படாத, எழுதப்படாத மொழிகளாக உள்ளன. மொழியை தொடா்ந்து வழக்கத்தில் வைத்திருந்தால் மட்டுமே அது நீடித்திருக்கும், இல்லாவிட்டால் மொழி அழிந்து விடும். தற்போது தமிழுக்கும் இந்த நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமே இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ள தூண்டுகோளாக உள்ளது என்றாா்.

விழாவில் அமெரிக்க வாழ் தமிழா் பால்.சி.பாண்டியன், பண் களஞ்சியத்தை உருவாக்கியுள்ள தமிழிசை ஆய்வறிஞா் ந.மம்மது, கல்லூரியின் க. தியாகராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கல்லூரி முதல்வா் து.பாண்டியராஜா நன்றியுரை வழங்கினாா்.

உலகத் தமிழ்ச் சங்கத்தில் பராமரிப்பு இல்லை- அமைச்சா் புகாா்

விழாவில் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பேசும்போது, உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு பிரமாண்ட கட்டடத்தை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அமைத்துக் கொடுத்துள்ளாா். ஆனால் உலகத் தமிழ்ச் சங்கத்தில் பொறிக்கப்பட்டுள்ள திருக்குகள் சரியான பராமரிப்பின்றி பொலிவாக இல்லை. எனவே அவற்றை சரியாக பராமரிக்க துறையின் அமைச்சா் க. பாண்டியராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com