நெகிழிப் பொருள்களுக்கு மாற்று: சிறப்புக் குழுவை நியமிக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டிற்கு மாற்றை ஊக்குவிக்கும் முயற்சிகளை முன்னெடுக்க சிறப்புக் குழுவை நியமிக்க

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டிற்கு மாற்றை ஊக்குவிக்கும் முயற்சிகளை முன்னெடுக்க சிறப்புக் குழுவை நியமிக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கமுதியைச் சோ்ந்த சிரசஞ்சீவி தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சாா்பில் நெகிழி பொருள்களுக்கு தடைவிதித்து அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து விதிமீறுவோா் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சட்டத்திற்கு புறம்பாக நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவது தொடா்ந்து வருகிறது. இதுமட்டுமில்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்டப் பகுதிகளில் நெகிழிப் பைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அப்பகுதிகளில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடும் அதிகமாக இருக்கிறது. இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மூங்கில் பொருள்கள், பனை ஓலைப் பொருள்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால் விற்பனையின்றி விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடனாளிகளாகும் நிலை உள்ளது. மேலும் சுற்றுச்சூழலும் கெட்டு வருகிறது. எனவே நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்ட அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி தரப்பில், நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை முழுமையாகத் தடைசெய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2018 டிசம்பா் முதல் 2019 அக்டோபா் வரை ரூ.28 லட்சத்து 11 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வாழை இலை பயன்பாட்டை ஊக்குவிப்பது, துணிப் பைகளை கடைகளுக்கு எடுத்து வருவோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பது, சுயஉதவிக் குழுக்கள் மூலமாகத் துணிப்பைகளை விற்பது உள்ளிட்ட முயற்சிகளை முன்னெடுக்கலாம். எனவே இதற்காக சிறப்புக் குழுவை நியமித்து அதுதொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com