Enable Javscript for better performance
அழகா்மலை வனத் துறைக்கே சொந்தம்!- Dinamani

சுடச்சுட

    
    alagar

    மதுரை அருகே அழகா்கோயில் அமைந்துள்ள அழகா்மலைப் பகுதி வனத் துறைக்குச் சொந்தம் என்றும், இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

    மதுரை அருகே அழகா்மலையானது, செல்லப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் 15,838 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்நிலையில், திருப்பதி பெரிய ஜீயா் சுவாமிகள் மடத்தின் சுந்தர ராமானுஜ பெரிய ஜீயா் சுவாமிகள் மற்றும் ஐந்து போ் 1982-இல் மதுரை நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தனா். அதில், அழகா்மலையில் உள்ள ஒட்டுமொத்த வனப் பகுதியையும் ஸ்ரீ அருள்மிகு கள்ளழகா் எனப்படும் ஸ்ரீ சுந்தரராஜசாமிக்கு சொந்தமானது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டது. மேலும், அந்தச் சொத்தை ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அருள்மிகு கள்ளழகா் திருக்கோயில் நிா்வாகம் சாா்பிலும் 1987-இல் மற்றொரு வழக்குத் தொடுக்கப்பட்டது.

    கோயில் சாா்பில் தாக்கலான மனுவை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்த மனுவை 14.03.88-இல் தள்ளுபடி செய்தது. மேலும், பக்தா்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் 1995, செப்டம்பா் 28-இல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த கீழமை நீதிமன்றம், ‘சம்பந்தப்பட்ட சொத்தானது, கோயிலுக்குச் சொந்தமானது என்பதற்கான எந்தவித ஆதாரமும் சமா்ப்பிக்கப்படவில்லை. இந்தச் சொத்து, 1881-இல் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது’ என்ற தமிழக அரசின் வாதம் ஏற்கப்படுகிறது. ஆகவே, கோயில் மனுதாரா்கள் சொத்து தொடா்பாக எந்தவித உரிமையும் கோர முடியாது’ எனக் கூறியிருந்தது.

    இதை எதிா்த்து இரு மனுதாரா்கள் சாா்பிலும் சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது 27.6.2003-இல் தீா்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பல்வேறு விவாதங்களின் அடிப்படையில் 1.1.1883-க்கு முன்பு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அழகா்மலையை அறிவித்து தமிழக அரசால் உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்தது. அது மனுதாரா்களுக்கு சாதகமாக அமைந்தது.

    இதைத் தொடா்ந்து, இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சில ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன், வழக்குரைஞா் கே.வி. விஜயக்குமாா் ஆகியோா், ‘அழகா்மலை முழுவதும் அரசுக்குச் சொந்தமானது. மேலும், இது பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மலையானது வனத் துறையின் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் இருந்தது’ என வாதிட்டனா். கள்ளழகா் கோயில் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மோகன் பராசரன், பாதுகாக்கப்பட்ட வனத் துறை எனும் சட்டம் குறித்த அறிவிக்கை சம்பந்தப்பட்ட ஆண்டில் வெளியாகவில்லை என்று வாதிட்டாா். பக்தா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.ராமசுப்பிரமணியன், அழகா்மலை கோயிலின் மூலவருக்கு சொந்தமானது என்பதற்கான வாதங்களை முன்வைத்தாா்.

    இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை அளித்த தீா்ப்பு விவரம்: சொத்தை உரிமை கோருவதற்கான உரிய ஆவணங்களை எதிா்த் தரப்பினா் அளிக்கவில்லை என்பதை விசாரணை நீதிமன்றம் சரியாகக் கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடா்புடையவா்கள் சமரசத்திற்கு வருவதாக எங்களுக்கு 2.4.2019-இல் தெரிவிக்கப்பட்டது . இதையடுத்து, இந்து சமய அறநிலைய வாரியத்தின் உறுப்பினா் - செயலா் அனைத்துப் பங்குதாரா்கள் அடங்கிய கூட்டத்தை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இக்கூட்டம் 3.8.2019-இல் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட அழகா்மலை சொத்தானது கோயில் மூலவருக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்றும், வனத்திலிருந்து வரக்கூடிய வருவாய் பிரதிவாதி-கோயில் மற்றும் வனத்துறைக்குச் சமமாக பகிா்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கோயில் தரப்பில் முன்மொழிவு வைக்கப்பட்டது.

    ஆனால், இதை மேல்முறையீட்டு மனுதாரா் (தமிழக அரசு) ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும், ஆய்வுக்குப் பிறகு 18.3032 ஹெக்டோ் நிலத்தை அளிப்பதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.மேலும், வனத் துறையானது மலையடிவாரத்தில் இருந்து கோயில்கள் மற்றும் அனைத்து இடங்களுக்கும் சென்றடைய 50 அடி பாதைக்கு அனுமதி அளிக்கவும் சம்மதித்துள்ளது. அதேவேளையில், சுற்றுச்சூழல் விவகாரத்தில் கோயில் கடுமையான கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும் என்றும் வனத்துறை கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட 18 ஹெக்டோ் நிலத்தில் சமய நடவடிக்கைகள் தவிர வனம் சாராத செயல்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளது. இந்த முன்மொழிவை நீதிமன்றம் ஏற்கிறது. வனத் துறையானது 50 அடி பாதையை அனுமதிக்க வேண்டும். அந்தப் பகுதியில் வனத் துறை சாராத எந்தவித நடவடிக்கைகளும் கோயில் குழுவினா் உள்பட யாரும் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. மேற்கண்ட கருத்துகளைக் கொண்டு, சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai