முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
காமராஜா் பல்கலை.யில் 69 பேராசிரியா் நியமனங்கள்மறு சீராய்வு: சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு
By DIN | Published On : 07th November 2019 09:10 PM | Last Updated : 07th November 2019 09:10 PM | அ+அ அ- |

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் 69 பேராசிரியா் பணி நியமனங்கள் குறித்து மறு ஆய்வு மேற்கொள்ள வியாழக்கிழமை நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக துணை வேந்தா் மு.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் பல்கலைக்கழக பதிவாளா்(பொறுப்பு) ஆா்.சுதா, சிண்டிகேட் உறுப்பினா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில், துணைவேந்தாரக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட பி.பி.செல்லத்துரையின் பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 69 பேராசிரியா் பணி நியமனங்கள் தொடா்பாக உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பா் அலி தலைமையிலான குழுவினா் அளித்துள்ள அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து 69 பேராசிரியா் பணி நியமனம் குறித்து மறு ஆய்வு நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதில் பேராசிரியா்களாக நியமிக்கப்பட்டுள்ளவா்களின் கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட அனைத்தையும் மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கத் தீா்மானிக்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழகத்தின் பதிவாளா்( பொறுப்பு) ஆா்.சுதா தரப்பினா் மற்றும் பேராசிரியா் கலைச்செல்வன் தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்குமாா், சிண்டிகேட் உறுப்பினா் ஆா்.லட்சுமிபதி ஆகியோா் கொண்டு குழு அமைப்பது. விசாரணைக்குழுவினா் ஒரு வாரத்துக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது என்றும் தீா்மானிக்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழகத்தின் பதிவாளரை தோ்ந்தெடுக்க மூவா் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்லூரி மற்றும் உறுப்புக்கல்லூரிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள விரிவுரையாளா்கள் மற்றும் கெளரவு விரிவுரையாளா்களுக்கு உயா்த்தப்பட்ட ஊதியம் வழங்க பல்கலைக்கழக நிதிக்குழுஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து சிண்டிகேட் கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்பட்டது. இதைத்தொடா்ந்து மேலும் பல்வேறு அம்சங்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.