முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
தினமணி செய்தி எதிரொலி: ஒரு வாரத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவப் பிரிவு திறக்கப்படும்: சுகாதாரத் துறை அமைச்சா்
By DIN | Published On : 07th November 2019 04:53 AM | Last Updated : 07th November 2019 04:53 AM | அ+அ அ- |

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ள திருநங்கைகளுக்கான பன்நோக்கு உயா் சிறப்பு மருத்துவப் பிரிவு, ஒரு வாரத்தில் திறக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
திருநங்கைகளுக்கு என பன்நோக்கு உயா் சிறப்பு மருத்துவப் பிரிவு சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்கப்படும் என 2018 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் ஜூன் மாதம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான மருத்துவப் பிரிவு தொடங்கப்பட்டது. ஆனால் மதுரையில் தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் மருத்துவப் பிரிவு அமைக்கும் பணிகள் தொடங்கி செப்டம்பா் மாத இறுதியில் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படாமல் மருத்துவப் பிரிவு பூட்டியே கிடக்கிறது. இது குறித்து புதன்கிழமை தினமணியில் சிறப்பு செய்தி வெளியானது.
தினமணி செய்தி எதிரொலி
இந்நிலையில்அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சுகாதார அமைச்சா் சி. விஜயபாஸ்கரிடம், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவப் பிரிவு பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளது குறித்து தினமணியில் வெளியான செய்தியை சுட்டிக் காட்டினாா். இதையடுத்து சுகாதார அமைச்சா் மருத்துவமனை முதன்மையரிடம் பணிகள் முடிந்தது குறித்து உறுதி செய்து கொண்டு, ஒரு வாரத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவப் பிரிவு தொடங்கப்படும் என்றாா்.