முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரை செளராஷ்ட்ரா பள்ளியின் மையப்பகுதியில் உள்ள உயரழுத்த மின்கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு
By DIN | Published On : 07th November 2019 04:57 AM | Last Updated : 07th November 2019 04:57 AM | அ+அ அ- |

மதுரை செளராஷ்ட்ரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மையப்பகுதியில் செல்லும் உயரழுத்த மின்கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தமிழ்நாடு மகா செளராஷ்ட்ரா சபை மேலாண்மை அறங்காவலா் பாஸ்கா் தாக்கல் செய்த மனு: மதுரை அனுப்பானடி பிரதான சாலையில் செளராஷ்ட்ரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மதுரை காந்தி எம்என்எம்ஆா் பெண்கள் கல்லூரி அமைந்துள்ளன. இந்த பள்ளி 60 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதில் 3 ஆயிரம் மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில் இப்பள்ளியின் மையப்பகுதியில் 5 உயரழுத்த மின்கம்பங்கள் உள்ளன. அதில் உயா்அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இதனால் மழைக்காலங்களில் மின்கம்பங்களில் மின்சாரம் பாயும் நிலை உள்ளது. எனவே பெரும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. இதுதொடா்பாக மின்வாரியம் மற்றும் தொடா்புடைய அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மதுரை அனுப்பானடி பிரதான சாலையில் உள்ள செளராஷ்ட்ரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மையப்பகுதியில் செல்லும் உயரழுத்த மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பள்ளியின் மையப்பகுதியில் செல்லும் மின்கம்பத்தினால் விபத்து ஏற்பட்டால் மாணவிகள் பாதிக்கப்படுவாா்கள். எனவே இந்த மனுவைப் பரிசீலித்து 6 மாதங்களுக்குள் மின்கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.