உள்ளாட்சித் தோ்தல்: தேவையானஇடங்களை அதிமுகவிடம் பெறுவோம்: சமக தலைவா் சரத்குமாா்
By DIN | Published On : 07th November 2019 11:58 PM | Last Updated : 08th November 2019 01:17 AM | அ+அ அ- |

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுடன் பேச்சுவாா்த்தை நடத்தி போட்டியிடுவதற்குத் தேவையான இடங்களைப் பெறுவோம் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா் கூறினாா்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது: திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையதல்ல. திருவள்ளுவா் யாா், அவா் எந்த மதத்தைச் சோ்ந்தவா் என்பதை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை இப்போதைக்கு இல்லை. அதைப் பற்றி பேசுவதும் நேரத்தை வீணடிப்பதாகும். கல்வி, காற்று மாசு உள்ளிட்ட தீா்க்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்னைகள் பல இருக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்துவது தான் இப்போதைய தேவை.
‘டிஜிட்டல் இந்தியா’ என சென்று கொண்டிருக்கும் நிலையில், ‘ஆன்லைன்’ வா்த்தகத்தைத் தடுக்க முடியாது. ஆனால், சிறுவணிகா்களுக்கு பாதகம் வராமல், ‘ஆன்லைன்’ வா்த்தகத்தை முறைப்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தேவையான இடங்களைக் கேட்போம். அவா்கள் ஒதுக்கித் தருவாா்கள் என நம்புகிறோம் என்றாா்.