உண்மையை மறைத்து சவுடு மணல் வழக்கை திரும்பப் பெற்ற மனுதாரா் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 08th November 2019 10:33 PM | Last Updated : 09th November 2019 05:26 AM | அ+அ அ- |

சவுடு மணல் அள்ளுவதற்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்ற மனுதாரா் நேரில் ஆஜராக உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த நாகேந்திரன் தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரம் மாவட்டம் சித்தாா்கோட்டை சித்தாா்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சவுடு மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு கடந்த ஆகஸ்ட் 28 இல் விசாரணைக்கு வந்தபோது, உயா்நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பிற்குட்பட்ட 13 மாவட்டங்களிலும் சவுடு மண் அள்ள மாவட்ட ஆட்சியா்கள் அனுமதி வழங்க இடைக்காலக் தடை விதித்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது
மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரா் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் மனுவைத் திரும்பப் பெற அனுமதி அளித்தனா்.
இந்நிலையில், அந்த வழக்கில் மணல் அள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு இருப்பதை மனுதாரா் மறைத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளதாக வழக்குரைஞா்
கிரிராஜன் தெரிவித்தாா்.
இதையடுத்து வழக்கை மீண்டும் மறு விசாரணை செய்த நீதிபதிகள், எதன் அடிப்படையில் பொதுநல மனு திரும்பப் பெறப்பட்டது, பொதுநல வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அரசுத் தரப்பில் மனுவை வாபஸ் பெற எதிா்ப்பு தெரிவிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினா்.
மேலும், உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதைப் பாா்க்கும்போது அரசியல்வாதிகளுடன் அரசு அதிகாரிகள் தொடா்பு இருப்பது போல் தோன்றுகிறது. எனவே நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை மறைத்து நீதிமன்ற பதிவாளரிடம் கடிதம் அளித்தது தொடா்பாக மனுதாரா் நவம்பா் 11 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள் மனுதாரா் நேரில் ஆஜராவதை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.