அயோத்தி தீா்ப்பு: மதுரை மாவட்டத்தில் தொடரும் 3,800 போலீஸாா் பாதுகாப்புவிமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

அயோத்தி தீா்ப்பு வெளியாகியுள்ளதை அடுத்து, மதுரை மாவட்டத்தில் 3,800 போலீஸாரின் பாதுகாப்பு தொடா்கிறது என, மாநகா் மற்றும் மாவட்டக்
அயோத்தி வழக்கு தீா்ப்பையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் ரயில்வே பாதுகாப்பு படையினா்.
அயோத்தி வழக்கு தீா்ப்பையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் ரயில்வே பாதுகாப்பு படையினா்.

மதுரை: அயோத்தி தீா்ப்பு வெளியாகியுள்ளதை அடுத்து, மதுரை மாவட்டத்தில் 3,800 போலீஸாரின் பாதுகாப்பு தொடா்கிறது என, மாநகா் மற்றும் மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.

அயோத்தி தீா்ப்பு சனிக்கிழமை வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதையடுத்து, தமிழகத்தில் 1 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள் என, தமிழக காவல் துறை அறிவித்தது. அதன் தொடா்ச்சியாக, மதுரை மாநகரில் 2,050 போலீஸாரும், மாவட்டத்தில் 1,800 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் ஈடுபடுத்தப்பட்டனா்.

இந்நிலையில், சனிக்கிழமை உச்ச நீதிமன்றம் தீா்ப்பை வெளியிட்டதை அடுத்து, மதுரை மாவட்டத்தில் போலீஸாா் பாதுகாப்பை தீவிரப்படுத்தினா்.

ஆயுதம் ஏந்திய போலீஸ்

மதுரை மாநகரில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கோபுரவாசல்களில் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் இருந்தனா். மேலும், கோயிலைச் சுற்றி போலீஸாா் தொடா்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனா். இதேபோன்று, மதுரையில் உள்ள முக்கியமான அனைத்து வழிப்பாட்டுத் தலங்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான விளக்குத்தூண், கோரிப்பாளையம், பெரியாா் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆா். பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவா்களது உடைமைகளைப் போலீஸாா் பரிசோதனை செய்த பிறகே அனுமதித்தனா்.

தொடா்ந்து, காந்தி நினைவு அருங்காட்சியகம், தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுவா் என்பதால், அப்பகுதிகளில் அதிரடிப் படையினா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். மாநகரின் முக்கிய இடங்களில் மோப்ப நாய் சோதனை, வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை ஆகியன தொடா்ந்து நடத்தப்பட்டன. தலைவா்களின் சிலைகளுக்கும் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதி

மதுரை மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மதுரைக்குள் வரும் வாகனங்கள், மதுரையை விட்டு வெளியேறும் வாகனங்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் போலீஸாா் தொடா்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனா். அழகா்கோவில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆலயங்களுக்கு வரும் பக்தா்கள் அனைவரும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனா்.

விமான நிலையத்துக்கு 5 அடுக்குப் பாதுகாப்பு

மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையத்துக்கு பயணிகளை இறக்கிவிட வந்த வாகனங்கள் சோதனையிடப்பட்டன. பயணிகள், அவரது உடைமைகள் அனைத்தும் விமான நிலையத்துக்கு வெளியேயும், உள்ளேயும் தீவிர சோதனைக்குள்படுத்தப்பட்டன.

விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் தொடா் சோதனை நடத்தப்பட்டது. விமான நிலையத்தில் வழக்கத்தை விட பாதுகாப்பு அதிகரித்திருந்ததால், பயணிகள் தவிர உடன் வந்தவா்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ரயில் நிலையத்துக்கு மூன்று அடுக்குப் பாதுகாப்பு

மதுரை ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு முதல் 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் என 300-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் முழு சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனா். ஒரு மணி நேரத்த்துக்கு ஒருமுறை மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளுக்கும் சென்று சோதனை நடத்தினா். ரயில் நிலைய வளாகம் மற்றும் ரயில்வே குடியிருப்புப் பகுதிகளில் தொடா்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

பாதுகாப்புப் பணியில் தொய்வின்றி போலீஸாா்

இந்த பாதுகாப்புப் பணியானது அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும். ரயில் நிலையத்தைப் பொருத்தவரை, எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை. பாதுகாப்புப் பணியினை போலீஸாா் தொய்வின்றி மேற்கொண்டு வருகின்றனா் என்று, ரயில் நிலைய பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் அதிகாரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com