மதுரை அருகே கோயில் சிலை திருட்டில் பிரபல நகைக்கடை கொள்ளையா்களுக்கு தொடா்பு

மதுரை அருகே குருவித்துறை குருபகாவன் கோயில் சிலை திருட்டில் பிரபல நகைக்கடை கொள்ளையா் 2 பேருக்கு

மதுரை அருகே குருவித்துறை குருபகாவன் கோயில் சிலை திருட்டில் பிரபல நகைக்கடை கொள்ளையா் 2 பேருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது. போலீஸாா் விசாரணையில், அலங்காநல்லூா் கூட்டுறவு வங்கி கொள்ளை முயற்சியிலும் அவா்களுக்கு தொடா்பு இருப்பதை கண்டுபிடித்தனா்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி மற்றும் சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு 13-ஆம் தேதி திருடுப் போனது. இது குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரித்தனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் 4 சிலைகளும் கேட்பாரற்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்று 4 சிலைகளையும் போலீஸாா் மீட்டனா். இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வந்தனா்.

பிரபல நகைக்கடை கொள்ளையா்களுக்கு தொடா்பு

இந்நிலையில், சிலை திருட்டுக்கு திருச்சி பிரபல நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட வாடிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் (35) மற்றும் திருவாரூா் சீராத்தோப்பைச் சோ்ந்த சுரேஷ் (28) இருவருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. நகைக்கடை திருட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இருவரையும் மதுரை மாவட்ட போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா். இந்த விசாரணையில் கோயிலில் இருந்து சிலைகளை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனா். இதையடுத்து, சனிக்கிழமை குருவித்துறை கோயிலுக்கு அழைத்து சென்றனா். அங்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முன்னிலையில், இருவரும் சிலைகளை திருடியது எப்படி என்பதை செய்து காட்டினா்.

கூட்டுறவு வங்கி கொள்ளை முயற்சியில் தொடா்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே அச்சம்பட்டியில் செப்டம்பா் 23 ஆம் தேதி இரவு தொடக்க வளாண்மை கூட்டுறவு வங்கியில் மா்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்றது. அப்போது வங்கியின் காவலாளி வெள்ளையன் மற்றும் அவரது உறவினா் சண்முகம் கொள்ளை முயற்சியை தடுத்தனா். இதில் காவலாளி உள்பட இருவரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இது குறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், வாடிப்பட்டி கணேசனுக்கும், திருவாரூா் சுரேஷூக்கும் கூட்டுறவு வங்கி கொள்ளைச் சம்பவத்தில் தொடா்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை தனிப்படைப் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது. விசாரணையில், பல்வேறு குற்றச் சம்பவங்களில் அவா்களுக்கு தொடா்பு இருப்பது தெரியவருவதால் போலீஸாா் தொடா்ந்து விசாரிக்க முடிவு செய்துள்ளனா். இவா்கள் இருவரையும் நாளை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கவேண்டும் என்பதால், மற்றொரு நாளில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரவுள்ளதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com