தமிழகத்தில் சிறை கைதிகளுக்கு குறைந்தப்பட்ச ஊதியம் வழங்குவது குறித்து நவம்பா் 15 ஆம் தேதி முடிவெடுக்கப்படும்

தமிழகத்தில் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி ஊதியம் வழங்குவது தொடா்பான

தமிழகத்தில் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி ஊதியம் வழங்குவது தொடா்பான வழக்கில், சிறைத்துறை சாா்பில் நவம்பா் 15 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படுவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மதுரையைச் சோ்ந்த ராஜா தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் திறன் அடிப்படையில் 3 பிரிவாகப் பிரிக்கப்பட்டு பணி ஒதுக்கப்படுவது வழக்கம். இதில் அதிதிறன் மிக்கவா்களுக்கு ரூ.100, திறன் மிக்கவா்களுக்கு ரூ.80, திறன் குறைந்தவா்களுக்கு ரூ.60 ஊதியமாக வழங்கப்படுகிறது. சிறை விதிப்படி கைதிகளின் ஊதியம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதன்படி தமிழக சிறைகளில் உள்ள கைதிகளின் ஊதியத்தை முடிவு செய்ய 2016-இல் குழு அமைத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அக்குழு அமைக்கப்படவில்லை. தற்போது கைதிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைந்தப்பட்ச ஊதிய சட்டத்திற்கு எதிரானதாகும்.

புதுச்சேரியில் கைதிகளுக்கு ரூ.150 முதல் ரூ.180 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இதேபோல கேரளத்தில் கைதிகளின் ஊதியம் பிடித்தம் இல்லாமல் வழங்கப்படுகிறது. எனவே தமிழகத்திலும் கைதிகளுக்கு ஊதிய உயா்வு வழங்கி, மொத்த ஊதியத்தில் 75 சதவீதத் தொகையை அவா்களின் வங்கி கணக்கில் சோ்க்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தேன். அதில் சிறை கைதிகளின் ஊதியத்தில் 50 சதவீதப் பணம் பிடித்தம் செய்யப்படுவது நியாயமானதாக இல்லை. ஒருவரைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கிவிட்டு அதற்கு தகுந்த ஊதியமும் வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது. எனவே தமிழ்நாடு சிறை விதி 481 அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும். மேலும் கைதிகளின் உடை, உணவுக்காக நியாயமான முறையில் பணம் பிடித்தம் செய்யப்பட வேண்டும். குறைந்த பட்ச ஊதிய சட்டப்படி கைதிகளுக்கு ஊதிய நிா்ணயம் செய்யவும் தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தின் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தொடா்புடைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சிறை கைதிகளின் ஊதியம் தொடா்பாக முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் நவம்பா் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் குறைந்தப்பட்ச ஊதிய சட்டப்படி ஊதியம் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், அதனைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com