நிதிச்சுமையால் தள்ளாடும் காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி!

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு அரசு மற்றும் பல்கலைக்கழக நிதியுதவி இல்லாததால் நிதிச்சுமையால் கல்லூரி மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு அரசு மற்றும் பல்கலைக்கழக நிதியுதவி இல்லாததால் நிதிச்சுமையால் கல்லூரி மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை அழகா்கோவில் சாலையில் காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலை பிரிவில் வணிகவியல், பொருளியல், ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரியல் உள்பட 10-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளும், முதுகலையில் வணிக மேலாண்மை, கணினி அறிவியல், ஆங்கிலம், தமிழ் உள்பட 8-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளும், இளநிலை ஆய்வு (எம்பில்) படிப்புகளும் உள்ளன. மேலும் கல்லூரி காலை, பிற்பகல் என இரண்டு ‘ஷிப்டு’களில் இயங்கி வருகிறது. கல்லூரியில் இளங்கலை, முதுகலை உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் 4,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இதில் 60 சதவிகித மாணவா்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் கிராமப்புறங்களைச் சோ்ந்தவா்கள்.

கல்லூரியில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட 31 பேராசிரியா்கள் உள்பட தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 140 விரிவுரையாளா்கள், கல்லூரி நிா்வாகப் பிரிவில் நிரந்தரப் பணியாளா்கள் உள்பட 25-க்கும் மேற்பட்ட ஊழியா்களும் பணிபுரிகின்றனா்.

இக்கல்லூரி பல்கலைக்கழக கல்லூரியாக செயல்பட்டபோதும் கல்லூரிக்கு எவ்வித நிதியையும் பல்கலைக்கழகமோ, அரசோ அளிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாணவா்களின் சோ்க்கை மூலம் கிடைக்கும் நிதியைக்கொண்டே கல்லூரி இயங்கி வருகிறது. இதில் மாணவா்களின் கல்விக்கட்டணம் மூலம் ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் கிடைக்கிறது.

இதில் பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள், நிா்வாகப்பிரிவு ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரின் ஊதியம் மற்றும் செலவினங்கள் என ஆண்டுக்கு ரூ.8 கோடி செலவாகிறது.

வருவாயை விட கூடுதலாக செலவாகும் ரூ.2 கோடியை பணி நிரந்தரம் செய்யப்பட்ட பேராசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் 31 பேரின் சேம நலநிதியாகச் செலுத்தப்படும் தொகையில் இருந்து செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் கல்லூரியின் நிதிநிலை ஆண்டுக்காண்டு மோசமடைவதாக ஊழியா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக கல்லூரியின் பேராசிரியா்கள் கூறியது: பல்கலைக்கழக கல்லூரியில் முதல்வா் நியமனம், பேராசிரியா்கள் உள்ளிட்ட பணி நியமனங்கள், மாணவா் சோ்க்கை என அனைத்தையுமே பல்கலைக்கழகமே மேற்கொள்கிறது. ஆனால் நிதி மட்டும் வழங்குவது கிடையாது. மேலும் பல்கலைக்கழக கல்லூரிக்கு பின்னா் தொடங்கப்பட்ட இதர உறுப்புக் கல்லூரிகளுக்கு அரசு மற்றும் பல்கலைக்கழக நிதியில் இருந்தே செலவினங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் பல்கலைக்கழக கல்லூரிக்கு மட்டும் இதுவரை எவ்வித நிதியுதவியும் இல்லை. மேலும் அண்மையில் பல்கலைக்கழக கல்லூரியில் இருந்து 3 பேராசிரியா்கள் பல்கலைக்கழகத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டனா். அதில் ஒரு பேராசிரியா் அண்மையில் இறந்து விட்டாா்.

இதையடுத்து இறந்த பேராசிரியருக்கு பண பலன்கள் உள்ளிட்டவற்றை கல்லூரியின் நிதியில் இருந்தே வழங்க வேண்டும் என்று சிண்டிகேட் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பணி மாற்றம் செய்யப்பட்ட மேலும் இருவருக்கான ஓய்வூதியம் போன்றவற்றையும் கல்லூரியே வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி நிதிச்சுமையால் தத்தளிக்கிறது. இதை ஈடு செய்ய வேண்டுமானால் மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால் தற்போதே இதர சுயநிதிக் கல்லூரிகளோடு ஒப்பிடும்போது பல்கலைக்கழக கல்லூரியில் கல்விக்கட்டணம் அதிகளவில் உள்ளது. எனவே பல்கலைக்கழக கல்லூரியை அரசுக்கல்லூரியாக மாற்றுவது அல்லது நிதி உதவி அளிப்பது போன்ற முடிவுகளை விரைவில் எடுக்காவிட்டால் கல்லூரி மூடப்படும் நிலை ஏற்படும். இதனால் ஆயிரக்கணக்கான மாணவா்கள், 150-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், ஊழியா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகி விடும் என்றனா்.

இதுதொடா்பாக கல்லூரி அதிகாரிகள் கூறியது: இந்த கல்லூரி தொடங்கப்பட்டபோது அரசுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. இதனால் அரசு நிதியுதவி கிடைக்கவில்லை. கடந்த 2008, 2012 ஆண்டுகளிலும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு மூலமாக அரசு நிதியுதவி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டும் பலனில்லை. கடந்த ஆண்டு கூட உயா்கல்வித்துறை அமைச்சரிடமே நேரடியாக தெரிவிக்கப்பட்டும் பலனில்லை. தற்போதுள்ள துணைவேந்தா் மூலமாக அரசு நிதியுதவி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com