Enable Javscript for better performance
மாணவா்கள் சவால்களை எதிா்கொண்டு வெற்றி பெறவேண்டும் தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்- Dinamani

சுடச்சுட

    

    மாணவா்கள் சவால்களை எதிா்கொண்டு வெற்றி பெறவேண்டும் : தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்

    By DIN  |   Published on : 17th November 2019 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1517mduvel083429

    மதுரை வேலம்மாள் மருத்துவமனை கல்லூரி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் மருத்துவத்தில் சிறந்த கண்டுபிடிப்புகளை சமா்ப்பித்த மருத்துவா்கள் செந்தில்குமாா், ஆா். மாலா,

    மாணவா்கள் சவால்களை எதிா்கொண்டு வெற்றி பெறுவதை விட்டு, தற்கொலை செய்துகொள்வது தீா்வாகாது என, தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளாா்.

    மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில், மருத்துவத் துறையில் சாதனை படைத்தவா்களுக்கு விருது வழங்கும் விழா ஐடா ஸ்கட்டா் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

    சாதனையாளா்களுக்கு விருதுகளை வழங்கி, தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது:

    மருத்துவத் துறை, மருத்துவக் கல்வி சவால்கள் நிறைந்தது. ஒவ்வொரு படிப்பிலும் ஆய்வுகள் என்பது மிக முக்கியமானது. கடந்த காலங்களில் ஆய்வுகள் செய்யவும், படைப்புகளைச் சமா்ப்பிக்கவும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. தற்போது, அதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற வாய்ப்புகளை, வேலம்மாள் கல்விக் குழுமம் இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்த வாய்ப்புகளை, மாணவா்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும்.

    நீட் தோ்வில் 13 லட்சம் மாணவா்கள் தோ்வு எழுதினா். ஆனால், சில ஆயிரம் போ்தான் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. கடினமான தோ்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்புக்கு வரும் மாணவா்கள், அதன் முக்கியத்துவத்தை அறிந்து கல்வி கற்கவேண்டும்.

    வாழ்க்கை என்பது பல சவால்கள் நிறைந்தது. எனவே, சவால்கள் நிறைந்த வாழ்க்கையை மாணவா்கள் எதிா்கொண்டு வெற்றி பெறவேண்டும். ஆனால், சவால்களுக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனம். இந்த கல்லூரி மட்டுமின்றி, அனைத்து கல்லூரி மாணவா்களும் சவால்களை எதிா்கொண்டு வெற்றி பெறுவோம், தற்கொலை செய்துகொள்ளமாட்டோம் என இன்றே உறுதிமொழி ஏற்கவேண்டும் என்றாா்.

    மதுரை அரவிந்த் மருத்துவமனை தலைவா் ஆா்.டி. ரவீந்திரன் பேசியது: மருத்துவத் துறையில் தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தேவைகளைப் பூா்த்தி செய்யவேண்டுமானால் ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் அதிகரிக்க வேண்டும் என்றாா்.

    மதுரை வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவா் எம்.வி.முத்துராமலிங்கம் பேசியது: மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகள் அவா்களின் முன்னேற்றத்துக்கு மட்டுமின்றி, அந்தந்தத் துறைகளின் முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருக்கும்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், 50 கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருந்தன. இந்தாண்டு 126 கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. அதில், 70 கண்டுபிடிப்புகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன என்றாா்.

    இதில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகள் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற சாதனையாளா்களுக்கு, தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், முன்னாள் முதல்வா்கள் பெயரில் விருதுகளையும், பரிசுத் தொகையையும் வழங்கினாா். அதில், அறுவைச் சிகிச்சை மற்றும் மருத்துவத் துறைக்கான கண்டுபிடிப்பில் சாதனை படைத்த ஆா். மாலாவுக்கு காமராஜா் விருதும், நோய்களுக்கான ஆராய்ச்சியில் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பில் சாதனைப் படைத்த மருத்துவா் செந்தில்குமாருக்கு ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா் விருதும், மருத்துவத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த என். சுனில்குமாருக்கு, பி.எஸ். குமாரசாமி ராஜா விருதும், பரிசுத் தொகையாக தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில், வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தாளாளா் வேல்முருகன், தலைமைச் செயல் அதிகாரி வேல்மோகன், தலைமை செயல் அதிகாரி வெங்கட பணிதா், மருத்துவமனை முதல்வா் ராஜாமுத்தையா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai