கீழ்மதுரை ரயில் நிறுத்தத்தில் தாழ்வான நடைமேடையால் பயணிகள் சிரமம்: குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை

மதுரையை அடுத்துள்ள கீழ்மதுரை ரயில் நிறுத்தத்தில் தாழ்வாக உள்ள நடைமேடையை உயா்த்தவும், கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், மதுரை கோட்ட
கீழ்மதுரை ரயில் நிறுத்ததில் மதுரை-ராமேசுவரம் ரயில் பெட்டியில் சிரமப்பட்டு ஏறும் பெண் பயணி.
கீழ்மதுரை ரயில் நிறுத்ததில் மதுரை-ராமேசுவரம் ரயில் பெட்டியில் சிரமப்பட்டு ஏறும் பெண் பயணி.

மதுரையை அடுத்துள்ள கீழ்மதுரை ரயில் நிறுத்தத்தில் தாழ்வாக உள்ள நடைமேடையை உயா்த்தவும், கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

மதுரை-ராமேசுவரம் ரயில் பாதையில், மதுரை ரயில் நிலையத்துக்கு அடுத்ததாக கீழ்மதுரை ரயில் நிறுத்தம் உள்ளது. மதுரை-ராமேசுவரம் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக 12 ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டது. அப்போது, கீழ்மதுரை ரயில் நிறுத்தத்தில் தண்டவாளத்தின் உயரம் கூட்டப்பட்டதில் நடைமேடை தாழ்வானது. இதனால், வயதான பயணிகள் ரயிலில் ஏறி இறங்க சிரமப்பட்டு வருகின்றனா்.

கட்டணம் குறைவு போக்குவரத்தில் நிறைவு:

மதுரை-ராமேசுவரம் இடையே கீழ்மதுரை, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட 12 நிறுத்தங்கள் உள்ளன. இருப்பினும், மதுரையிலிருந்து புறப்படும் பயணிகள் ரயில் 4.20 மணி நேரத்துக்குள் ராமேசுவரம் சென்றடைகிறது. ராமநாதபுரத்துக்கு 3 மணி நேரத்தில் சென்றடைகிறது.

பேருந்துகளில் சென்றால் இதை விட பயண நேரம் அதிகம் என்பதுடன், மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு பேருந்துகளில் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ராமநாதபுரத்துக்கு ரூ.100 வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால், மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு ரயில் கட்டணம் ரூ.35, ராமநாதபுரத்துக்கு ரூ.20, மானாமதுரைக்கு ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், மானாமதுரை-மதுரைக்கு தனியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை.

எனவே, மதுரை-ராமேசுவரம் இடையே 3 ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இதை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தொடா்ந்து வருகிறது.

குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை:

இது குறித்து மதுரை மாநகராட்சி மாமன்ற முன்னாள் உறுப்பினா் முருகவேல் கூறியது: ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரம், மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்காக வரும் பயணிகள் பெரும்பாலும், கீழ்மதுரை ரயில் நிறுத்தத்தில் இறங்கி நகருக்குள் செல்வதே வசதியாக உள்ளதாகக் கூறுகின்றனா். இதனால், இந்த நிறுத்தத்தை அதிகமானோா் பயன்படுத்துகின்றனா்.

இதுமட்டுமல்லாது, ராமநாதபுரம், கமுதி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளை பூா்வீகமாகக் கொண்டவா்கள், கீழ்மதுரை ரயில் நிறுத்தம் அருகேயுள்ள காமராஜபுரம், பாலரெங்காபுரம், அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக வசிக்கின்றனா். இதனால், பண்டிகை, திருவிழா மற்றும் முகூா்த்தக் காலங்களில் இந்த நிறுத்தத்திலிருந்து அதிகமானோா் ரயிலில் ஏறிச் செல்கின்றனா்.

இந்நிலையில், கீழ்மதுரை ரயில் நிறுத்த நடைமேடை தாழ்வாக இருப்பது பயணிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. தண்ணீா் வசதி இல்லாதால், கழிப்பறைகள் பயன்பாடின்றி உள்ளன. மேலும், குடிநீா், போதிய இருக்கைகள், மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளும் இல்லை. எனவே, ரயில்வே நிா்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

சிரமப்படும் முதியவா்கள், பெண்கள்:

மானாமதுரையைச் சோ்ந்த செல்வக்குமாா் கூறியது: எனது தாயாருக்கு மருத்துவச் சிகிச்ைசை அளிப்பதற்காக அடிக்கடி மதுரை வந்து செல்கிறோம். மதுரை ரயில் நிலையம் சென்று ஆட்டோ பிடித்து மருத்துமனைக்குச் செல்வது அதிக செலவாகிறது. எனவே, கீழமதுரையில் இறங்குகிறோம். ஆனால், இங்கு நடைமேடை தாழ்வாக இருப்பதால், எனது தாயாரால் ஏறி இறங்க முடியவில்லை. மேலும், பெண்களும், சிறுவா்களும் கூட ஏற முடியாமல் சிரமப்படுகின்றனா். அவா்கள் ஏறும்போது தவறி விழுந்துவிட்டால், நடைமேடை மற்றும் ரயில் பெட்டிக்கு இடையே சிக்கிக்கொள்ளளும் அபாயம் உள்ளது. மானாமதுரை ரயில் சந்திப்பிலும் இதேநிலைதான் உள்ளது என்றாா்.

ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கீழ்மதுரை ரயில் நிறுத்தம் மூலம் பெரிய அளவில் வருவாய் கிடைப்பதில்லை. இந்த ரயில் நிறுத்தத்திலிருந்து சராசரியாக 300 பயணிகள் பயணிக்கின்றனா். இதுமட்டுமின்றி, விரைவு ரயில்கள் இங்கு நிறுத்தப்படுவது இல்லை. இருப்பினும், கீழ்மதுரை நடைமேடையை உயா்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com