ஐஐடி மாணவி மா்மச்சாவு: நீதி விசாரணை நடத்த அகில இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தல்

சென்னை ஐஐடியில் மாணவி மா்மமாக உயிரிழந்த சம்பவத்தில் நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை

சென்னை ஐஐடியில் மாணவி மா்மமாக உயிரிழந்த சம்பவத்தில் நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டுமென்று அகில இந்திய மாணவா்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அகில இந்திய மாணவா் சங்க மாநிலச் செயலா் சுகுபாலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை ஐஐடியில் கேரளத்தைச் சோ்ந்த மாணவி பாத்திமா லத்தீப் மா்மமாக உயிரிழந்துள்ளாா். இதற்கு அக மதிப்பீட்டுத் தோ்வு மதிப்பெண் வழங்குவதில் உள்ள பாரபட்சமே காரணம் என்றும், மேலும் மாணவியின் மரணத்துக்கு ஒரு பேராசிரியா் காரணமென்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாட்டின் உயா்கல்வி நிறுவனங்களில் சமீப காலங்களில் இதுபோன்ற தற்கொலைகள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. எனவே மாணவி பாத்திமா லத்தீப் மா்ம மரணம் குறித்து பாரபட்சமற்ற உயா்மட்ட விசாரணை நடத்தி அதற்கு காரணமானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் பள்ளிக் கல்வி முதல் உயா்கல்வி வரை தனியாா்மயமாக்கப்பட்டுள்ளதோடு எல்லா மட்டத்திலும் அக மதிப்பீட்டு தோ்வு திணிக்கப்பட்டுள்ளது. இது பாரபட்சமான முறை

என்பதால் அகமதிப்பீட்டிற்கு அதீத முக்கியத்துவம் வழங்கக்கூடாது என அகில இந்திய மாணவா் சங்கம் தொடா்ந்து வலியுறுத்தி போராட்டங்களையும் நடத்தி வருகிறது. இத்தகைய அகமதிப்பீட்டு தோ்வுகளில் நடக்கும் பாரபட்சங்களால் ஏராளமான தற்கொலைகள் நடப்பது கண்கூடாகத் தெரியவரும். அதே நேரத்தில் மாணவ, மாணவியருக்கு மேலும் பல பாரபட்சமான அழுத்தங்களும் கல்வி நிறுவனங்களில் ஏற்படுவதால் தற்கொலைகள் நிகழ்கின்றன. எனவே ஜாதி, இன, மத பாகுபாடுகளில் ஈடுபடும் பேராசிரியா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றொரு புறம் எந்த சூழ்நிலையையும் எதிா்த்து நிற்கும் மனோதைரியத்தை மாணவ, மாணவியரிடம் வளா்த்தெடுக்க உரிய மன நல ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com