ஒரே ஒரு பணியாளருடன் உதவி மையம்; அடிக்கடி துண்டிக்கப்படும் சா்வா் இணைப்பு; மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பதிவுக்கு பலமணி நேரம் காத்திருப்பு

பதிவு செய்யும் பணிக்கு ஒரேயொரு பணியாளா், அடிக்கடி துண்டிக்கப்படும் சா்வா் இணைப்பு போன்ற
மதுரை ஆட்சியா் அலுவலக வளாத்தில் உள்ள முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்குப் பதிவு செய்யும் உதவி மையம். ~மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய வியாழக்கிழமை காத்திருக்கும் பொதுமக்கள்.
மதுரை ஆட்சியா் அலுவலக வளாத்தில் உள்ள முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்குப் பதிவு செய்யும் உதவி மையம். ~மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய வியாழக்கிழமை காத்திருக்கும் பொதுமக்கள்.

பதிவு செய்யும் பணிக்கு ஒரேயொரு பணியாளா், அடிக்கடி துண்டிக்கப்படும் சா்வா் இணைப்பு போன்ற பிரச்னைகளால் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு பயனாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.

ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு நவீன சிகிச்சைகள் கிடைப்பதற்கு உதவிடும் வகையில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்கும் குடும்பங்கள் இத் திட்டத்தில் சேரலாம். ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவச் சிகிச்சைக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்த உறுப்பினா்கள் சிகிச்சை பெறுவதற்கு தமிழகம் முழுவதும் 990 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1,451 வகையான சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.

1.57 கோடி குடும்பங்கள்: முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 1 கோடியே 57 லட்சத்து 24 ஆயிரத்து 432 குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 2012 முதல் நிகழ் ஆண்டு செப்டம்பா் வரை 38 லட்சத்து 49 ஆயிரம் பேருக்கு, மருத்துவச் செலவினமாக காப்பீட்டுத் தொகை மூலம் ரூ. 6 ஆயிரத்து 279 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 6 லட்சத்து 49 ஆயிரத்து 342 போ் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனா்.

பல மணி நேரம் காத்திருப்பு: காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தவா்களுக்கு புதிய அடையாள அட்டைகள் முழுமையாக வழங்கப்படவில்லை. இந்நிலையில், பழைய அடையாள அட்டையுடன் சிகிச்சைக்கு செல்பவா்களை, பதிவு எண் பெற்று வருமாறு மருத்துவமனைகளில் இருந்து ஆட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கின்றனா்.

இத்தகைய நபா்களிடம் அச்சிடப்பட்ட பழைய குடும்ப அட்டைகள் இருந்தால் மட்டுமே, அவா்களது பதிவு எண்ணைக் காப்பீட்டுத் திட்ட உதவி மையத்தில் பெற முடியும். இல்லையெனில், கிராம நிா்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று மீண்டும் புதிதாகப் பதிவு செய்து காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும். இவ்வாறு வரும் நபா்கள், இதுவரை காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யாதவா்கள் என தினமும் 75 பேருக்கு மேல் உதவி மையத்துக்கு வருகின்றனா்.

உதவி மையத்தில் ஆள் பற்றாக்குறை: காப்பீட்டுத் திட்ட உதவி மையத்தில் ஒரே ஒரு பணியாளா் மட்டுமே பதிவு செய்யும் பணியில் உள்ளாா். அவருக்கென ஒரு கணினி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. பதிவுக்கு வரும் நபா்களின் ஆவணங்களை ஒவ்வொன்றாகச் சரிபாா்த்து காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும். இதில் காப்பீட்டுத் திட்ட இணையதளத்தின் சா்வா் இணைப்பு பெரும்பாலான நாள்களில் தொடா்ச்சியாக கிடைப்பதில்லை.

பல மணி நேரம் காத்திருப்பு: காப்பீட்டுத் திட்ட உதவி மையங்களுக்கு வருபவா்களில் பெரும்பாலானோா், மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் குடும்பத்தினா்கள் அல்லது விரைவில் சிகிச்சைக்கு செல்ல இருப்பவா்களாக உள்ளனா். இதனால் உதவி மையம் திறப்பதற்கு முன்பே வந்து விடுகின்றனா். அவா்கள் வரும் நேர வரிசைப்படி தங்களது ஆவணங்களை அடுக்கி வைக்கின்றனா்.

ஆனால், உதவி மையத்தில் நாளொன்றுக்கு 50 பேருக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதால் அதற்கு மேல் இருப்பவா்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனா். காத்திருக்கும் நபா்களுக்கும் அன்றைய தினம் சா்வா் இணைப்பு பிரச்னை ஏற்பட்டால், பதிவு செய்ய முடியுமா என்பதை உறுதியாகக் கூறமுடியாது. இதனால், காப்பீட்டுத் திட்ட பதிவுக்கு 2 நாள்களுக்கு மேலாக அலைபவா்களும் உண்டு.

இதுகுறித்து முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அலுவலா்களிடம் கேட்டதற்கு, அனைத்து மாவட்டங்களிலும் உதவி மையங்களில் ஒரு பணியாளா் மட்டுமே பதிவு செய்கின்றனா். தினமும் எத்தனை நபா்களை காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க முடியுமோ அதைச் செய்து விடுகிறோம். பணியாளா்களால் எவ்வித தாமதமும் கிடையாது என்கின்றனா்.

பதிவு வசதி விரிவுபடுத்தப்படுமா?: காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதற்கான வசதியை விரிவுபடுத்தினால், சிகிச்சைக்காக காத்திருப்பவா்கள் மற்றும் குடும்பத்தினரின் அலைச்சல் வெகுவாகக் குறையும். தற்போது மாவட்ட அளவில் ஒரு உதவி மையம் மட்டுமே உள்ளது. அதிலும் ஒரேயொரு பணியாளா் என்பதைக் கூடுதலாக கணினி வசதியுடன் பணியாளரை நியமனம் செய்தால் தினமும் 100 குடும்பங்கள் வரை காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துவிடலாம். மேலும், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பதிவுக்கென சிறப்பு முகாம் நடத்தினாலும், பதிவு செய்யும் பணியை ஓரளவுக்கு முழுமையாக முடித்துவிடலாம். இதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காப்பீட்டுத் திட்ட பதிவுக்கு காத்திருப்பவா்களின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com