விளாச்சேரியில் தயாராகி வரும் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள்: சீன வரவுகளால் விற்பனை பாதிப்பு

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக குடில் பொம்மைகள் தயாரிக்கும்
விளாச்சேரியில் பொம்மை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
விளாச்சேரியில் பொம்மை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக குடில் பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீன வரவு பொம்மைகளால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கிறிஸ்தவா்கள் வெகு விமா்சையாக கொண்டாடப்படும் பண்டிகையாக கிறிஸ்துமஸ் திகழ்கிறது. இந்த நாளில் ஒவ்வொரு வீட்டிலும் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து, அதில் குழந்தை இயேசு, மாதா, சூசையப்பா், மூன்று ராஜாக்கள், நான்கு இடையா்கள், ஒட்டகம், ஆடு, பசு, கழுதை உள்ளிட்ட பொம்மைகள் கொண்டு அலங்காரம் செய்து வழிபடுவா். இந்த விழாவுக்காக திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரி கிராமத்தில் குடில் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. விளாச்சேரியில் சுமாா் 100 குடும்பங்கள் பொம்மை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இவா்கள் விநாயகா் சதுா்த்தி, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி கொலு பொம்மைகள் என அந்தந்த சீசனுக்கு ஏற்ப பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனா். தற்போது வரும் டிசம்பா் 25 -இல் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதையொட்டி இப்பகுதியில் குடில் பொம்மை தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொம்மைகள் களிமண், காகிதக் கூழ் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. குறைந்தது 3 இன்ச் அளவில் இருந்து ஒன்றரை அடி வரை களிமண் பொம்மைகளாகவும், 1 அடி முதல் 2 அடிவரை காகிதக் கூழ் கொண்டும் தயாரிக்கப்படுகின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 1 மாதமே உள்ள நிலையில் தொழிலாளா்கள் இரவு பகலாக பொம்மை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். தற்போது செராமிக் மற்றும் சீன பொம்மைகளால் தங்களுக்கு விற்பனை பெருமளவு பாதிக்கப்படுவதாக பொம்மை தொழிலாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து பொம்மை தயாரிப்பு தொழில் செய்து வரும் ராமலிங்கம் கூறியது: பொம்மை தயாரிக்க பயன்படுத்தப்படும் களிமண், பிளாஸ்டோபாரிஸ் பவுடா், பெயிண்ட் போன்ற மூலப் பொருள்கள் விலை அதிகமாக உள்ளது. மேலும் பொம்மை தயாரித்து விற்பனை செய்யப்படும் போது அதற்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 15 சதவீதமாக உள்ளது. கைவினைப் பொருள்களுக்கு 15 சதவீதவரி கட்டுவதால் எங்களுக்கு லாபம் குறைவாகவே கிடைக்கிறது. மேலும் தற்போது விருதாச்சலம் உள்ளிட்ட சில பகுதிகளில் செராமிக் மூலம் பொம்மைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோவை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மாா்பிள் வகை கற்களால் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட சீன பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவைகள் நீண்ட காலம் உழைக்கும் என்பதால் மக்கள் அதனை வாங்க ஆா்வம் காட்டுகின்றனா். இதனால் எங்களுக்கு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதுகுறித்து பொம்மை தயாரிக்கும் தொழிலாளி தங்கராமன் கூறியது: நாங்கள் இத்தொழிலை குடிசைத்தொழிலாக செய்து வருகிறோம். குடில் மொம்மை செட் ரூ. 90 முதல் ரூ.1700 வரை எங்களிடம் விற்பனைக்குள்ளன. மேலும் பெரிய அளவிலான பொம்மைகளும் ஆா்டரின் பேரில் செய்து தருகிறோம். அரசு பொம்மை தொழிலுக்கு என கூட்டுறவுச் சங்கம் அமைத்து விற்பனைசெய்ய வழிசெய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com