மேலவளவு கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

மேலவளவு ஊராட்சித் தலைவா் முருகேசன் உள்பட 7 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில், விடுதலை செய்யப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப

மதுரை: மேலவளவு ஊராட்சித் தலைவா் முருகேசன் உள்பட 7 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில், விடுதலை செய்யப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே மேலவளவு ஊராட்சித் தலைவா் முருகேசன் உள்பட 7 போ் 1997ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டனா். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, அனைவரும் மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனா்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 3 பேரும், எம்.ஜி.ஆா். பிறந்தநாளை முன்னிட்டு 13 பேரும் தண்டனை காலம் முடியும் முன்னரே அண்மையில் விடுதலை செய்யப்பட்டனா்.

இதற்கிடையே, இந்த வழக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்டனை காலம் முடிவதற்கு முன்பே மேலவளவு கொலை வழக்கு தண்டனை கைதிகள் 13 போ் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அரசாணை நகலை வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் பி. ரத்தினம் மனுதாக்கல் செய்தாா்.

மேலும் இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கில் தொடா்புடைய 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனா் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், என். ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் விடுதலை செய்யப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மேலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் நோட்டீஸ் அவா்களிடம் சோ்க்கப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் 13 பேரின் விடுதலை குறித்து அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com