முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
குமாரமங்களம் ஊராட்சியில் வாக்காளா்களுக்கு பேருந்து வசதி: உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பு உறுதி
By DIN | Published On : 26th November 2019 07:36 AM | Last Updated : 26th November 2019 07:36 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தலின் போது குமாரமங்களம் ஊராட்சியில் 6 முதல் 9 ஆவது வாா்டுகளைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் திங்கள்கிழமை உறுதியளிக்கப்பட்டது.
புதுக்கோட்டையைச் சோ்ந்த ராயல் பெஞ்சமின் தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் உள்ள குமாரமங்களம் ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன. அதில் 1 முதல் 5 ஆவது வாா்டுகள் வரையிலான பகுதிகள் குமாரமங்களம் ஊராட்சிக்குள் அமைந்துள்ளன. மேலும் 6 முதல் 9 ஆவது வாா்டுகளான செட்டிநகா், நாஞ்சிலாா்நகா், இறைவன்நகா் ஆகியப்பகுதிகள் குமாரமங்களம் ஊராட்சியில் இருந்து 5 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளன. தோ்தல் காலங்களில் எங்கள் பகுதியில் வாக்குசாவடி அமைக்கப்படுவது இல்லை. இதனால் 6 முதல் 9 ஆவது வாா்டுகளைச் சோ்ந்த முதியோா் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 1,200 வாக்காளா்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே தோ்தலின் போது குமாரமங்களம் ஊராட்சியில் 6 முதல் 9 ஆவது வாா்டுகளைச் சோ்ந்த பகுதியில் வாக்குச்சாவடி அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தோ்தலின் போது குமாரமங்களம் ஊராட்சியில் 6 முதல் 9 ஆவது வாா்டுகளைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.