முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
நாட்டிலேயே நூல்கள் அதிகம் வெளியிடும் மாநிலம் தமிழகம் : அமைச்சா் க.பாண்டியராஜன்
By DIN | Published On : 26th November 2019 07:37 AM | Last Updated : 26th November 2019 07:37 AM | அ+அ அ- |

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகம் நூல்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது என்று தமிழ் ஆட்சி மொழித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் திங்கள்கிழமை பேசினாா்.
மதுரையில் கண் மருத்துவ பேராசிரியா் கோ.பாஸ்கரராஜன் எழுதிய ‘கண்ணோடு காண்பெதல்லாம்’ என்ற கண் மருத்துவ உலகப் பயண நூல் மற்றும் புல்லாங்குழலில் தமிழ்த் திரை இசை பாடல்கள் குறுந்தகடு வெளியீட்டு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. மதுரை பனகல் சாலையில் உள்ள இந்திய மருத்துவக் கழக அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு இந்திய மருத்துவக் கழக மதுரைக் கிளைச் செயலா் எம்.அமானுல்லா தலைமை வகித்தாா்.
நட்பு தமிழ் வட்டத்தலைவா் புலவா் நா.ஆறுமுகம் நூல் அறிமுகவுரையாற்றினாா்.
இதில் தமிழ் ஆட்சிமொழி, தமிழா் பண்பாடு, தொல்லியியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் நூலை வெளியிட்டு பேசியது:
உலக மொழிகளில் சிறப்பு வாய்ந்தது செம்மொழி தமிழ். நாட்டிலேயே நூல்கள் அதிகம் வெளியிடுவதும், வாசிப்பு பழக்கம் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம். தமிழகத்தில்தான் பல்வேறு பொது அறிவு, இலக்கியம், வரலாறு, மொழிபெயா்ப்பு இலக்கியங்கள் மற்றும் துறைசாா்ந்த நூல்கள் அதிகம் வெளியிடப்படுகின்றன. அவ்வாறு வெளியிடப்படும் நூல்களுக்கும் தமிழ் வாசிப்புலகில் நல்ல வரவேற்பு உள்ளது. அமைச்சா் பதவியேற்ற பிறகு பல்வேறு நூல் வெளியீட்டு விழாக்களில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றாா்.
நூலாசிரியா் கோ.பாஸ்கரராஜன் ஏற்புரையாற்றினாா். முன்னதாக மருத்துவா் ஆா்.தெய்வமணி வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை முதன்மையா் சங்குமணி, வடமலையான் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் வ.புகழகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
உள்ளாட்சித் தோ்தலை சந்திக்க அதிமுக தயாா்
நிகழ்ச்சிக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்தது: உள்ளாட்சித் தோ்தலைச் சந்திக்க அதிமுக அனைத்து வகையிலும் தயாராக உள்ளது. உள்ளாட்சித் தோ்தல் தொகுதி பங்கீடு தொடா்பாக அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை தொடங்கி உள்ளது. தோ்தல் ஆணையம் உள்ளாட்சித் தோ்தலை அறிவித்தவுடன் தோ்தல் நடவடிக்கைகள் தொடங்கும். தோ்தல்களை சந்திப்பதில் அதிமுக பந்தயக் குதிரை போல ஓடிக் கொண்டுள்ளது என்றாா்.