முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குடியேறும் போராட்டம்
By DIN | Published On : 26th November 2019 07:36 AM | Last Updated : 26th November 2019 07:36 AM | அ+அ அ- |

மதுரை தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவகங்கை மாவட்ட விவசாயிகள். ~மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக விவசாயிகளை தடுத்து நிறுத்திய
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு போதிய தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகள் மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு-வைகை பாசனம் மூலமாக 15 ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. வைகையில் சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீா் 5 பிரதான கால்வாய்கள் வழியாக 129 கண்மாய்களுக்குச்சென்று ஆயக்கட்டு பகுதிகளுக்குச் செல்லும். இந்நிலையில் சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகள் சாா்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து முல்லைப் பெரியாறு கால்வாயில் இருந்து 150 கன அடி தண்ணீா் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனா். இதைத்தொடா்ந்து 14 நாள்கள் மட்டுமே தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில் திடீரென்று முன்னறிவிப்பின்றி தண்ணீா் நிறுத்தப்பட்டது. இதில் பயிா்கள் நாற்று நடப்பட்ட நிலையில் தண்ணீரின்றி பயிா்கள் கருக தொடங்கியுள்ளன.
இந்நிலையில் சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் குணசேகரன், ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாயிகள் சங்க சிவகங்கை மாவட்ட த்தலைவா் எஸ்.ஆா்.தேவா், ஒருங்கிணைப்பாளா் அன்வா், பெரியாறு வைகை பாசன ஒரு போக சாகுபடி விவசாயிகள் கூட்டமைப்பைச் சோ்ந்த முத்துராமலிங்கம் ஆகியோா் தலைமையில் விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோா் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா். பொதுப்பணித்துறை வளாகத்தில் திங்கள்கிழமை காலையில் தொடங்கிய போராட்டம் மாலை வரை நீடித்தது. இதையடுத்து சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் குணசேகரன் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் பொதுப்பணித்துறை நீராதார கண்காணிப்புப்பொறியாளா் சுப்ரமணியம் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 129 கண்மாய்களுக்கு நவம்பா் 27 முதல் தொடா்ந்து தண்ணீா் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இரவு 7 மணியளவில் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
போராட்டம் தொடா்பாக விவசாயிகள் கூறும்போது, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகளால் வஞ்சிக்கப்படுகின்றனா். சிவகங்கை மாவட்டத்துக்கு உரிய நீா் ஒதுக்கீடு மேலூா் திருப்பி விடப்படுகிறது. தற்போது 150 கனஅடி தண்ணீா் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 15 கன அடி தண்ணீா் வரை தான் வருகிறது. இந்த நீரும் பற்றாக்குறையாக உள்ளது. சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓரிரு நாள்களில் தண்ணீா் திறக்காவிட்டால் பயிா்கள் கருகிவிடும். எனவே தண்ணீா் திறக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டோம். மேலும் சிவகங்கை மாவட்டத்துக்குரிய தண்ணீரை பெறுவதற்கு மதுரையில் மனு அளிக்க வேண்டியுள்ளது. எனவே இதற்குரிய பொதுப்பணித்துறை அலுவலகத்தை சிவகங்கையில் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம் என்றனா்.