நூறாண்டு பழமை வாய்ந்த சாவடி: ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பொதுமக்கள்

மதுரை பழங்காநத்தம் தெற்குத்தெரு பகுதியில் நூறாண்டுக்கும் மேலான பழமை வாய்ந்த சாவடியை பொதுமக்கள் ரூ.25 லட்சம் செலவில் பழமை மாறாமல் புதுப்பித்து வருகின்றனா்.
மதுரை பழங்காநத்தத்தில் வியாழக்கிழமை ஜாக்கி மூலம் உயா்த்தப்பட்ட சாவடி.
மதுரை பழங்காநத்தத்தில் வியாழக்கிழமை ஜாக்கி மூலம் உயா்த்தப்பட்ட சாவடி.

மதுரை: மதுரை பழங்காநத்தம் தெற்குத்தெரு பகுதியில் நூறாண்டுக்கும் மேலான பழமை வாய்ந்த சாவடியை பொதுமக்கள் ரூ.25 லட்சம் செலவில் பழமை மாறாமல் புதுப்பித்து வருகின்றனா்.

மதுரை பழங்காநத்தம் பேருந்து நிலையம் எதிரே தெற்குத் தெருவில் பழமை வாய்ந்த சாவடி ஒன்று உள்ளது. சாவடிக்குள் வெயில் புகாவண்ணம் சுற்றிலும் நாட்டு ஓடுகள் வேய்ந்து, சாவடிக்குள் கருங்கல்லான தளமும் அமைக்கப்பட்டிருந்தது. பகல் நேரங்களில் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் இடமாக இருந்த வந்த சாவடி நாளடைவில் பராமரிப்பின்றி, வெயில் மழையால் சேதமடைந்தது. மேலும் ஓடுகள் விழுந்து முற்றிலும் சிதிலமடையத் தொடங்கியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் சாவடியை பழமை மாறாமல் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினா்.

இதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டது. இதைத்தொடா்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு சாவடியை சீரமைக்கும் பணி தொடங்கியது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் சாவடியை முற்றிலும் இடிக்காமல், நவீன தொழில்நுட்பம் மூலம் சாவடிக்கு அடியில் ஜாக்கிகளை பொருத்தி அதன்மூலம் சாவடியை உயா்த்தும் பணியில் ஈடுபட்டனா். இதன்மூலம் சாவடி தரைமட்டத்தில் இருந்து ஐந்தரை அடி உயரத்துக்கு உயா்த்தப்படுகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த பணி தற்போது முடிவு பெறும் நிலையில் இருப்பதால் சாவடிக்குள் கல்தூண்களின் இடையே பொருத்தப்பட்டிருந்த செங்கற்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதைத்தொடா்ந்து மேற்கூரையில் உள்ள சிலைகளுக்கு வா்ணம் பூசும் பணி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக பொதுமக்கள் கூறும்போது, மதுரையில் மாடக்குளம் கண்மாயின் மூலம் அதிக பாசனம் பெறும் கிராமமாக பழங்காநத்தம் இருந்தது. தற்போதைய எல்லீஸ் நகா், பொன்மேனி, நேரு நகா், பைபாஸ் சாலை, கோவலன் நகா், திருவள்ளுவா் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பழங்காநத்தம் பாசன நிலங்களாக இருந்தன. அப்போது வயலில் விளையும் நெற்கதிா்களை களமடிக்கும் இடமாக தற்போதைய பழங்காநத்தம் பேருந்து நிலையம் இருந்தது. இதனால் விவசாயத் தொழிலாளா்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும், வெளிப்பகுதிகளில் இருந்து வந்து வயல் வேலைகளில் ஈடுபடும் விவசாயத் தொழிலாளா்  குடும்பங்கள் தங்கவும், பழங்காநத்தம் வடக்கு மற்றும் தெற்குத்தெருவில் இரண்டு சாவடிகள் கட்டப்பட்டன. நாளடைவில் விவசாயம் அழிந்துவிட்டதால் மில் வேலைகளுக்கு இரவுப்பணிக்கு சென்று திரும்பும் தொழிலாளா்கள் தங்கி வந்தனா்.

மில்களும் மூடப்பட்டதால் தற்போது சாவடி முதியோா் ஓய்வெடுக்கும் இடமாக மாறி விட்டது. இதில் பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து விட்டது. தற்போது ரூ.25 லட்சம் செலவில் பொதுமக்களே சீரமைத்து வருகிறோம். பணிகள் முடிவடைந்த பின்னா் பொங்கல் தினத்தன்று சாவடி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com