வாக்குப்பதிவு சதவீதத்தை உயா்த்த விழிப்புணா்வு நடவடிக்கை தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தை உயா்த்த விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சோ்ந்த அலுவலா்களுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில், மாதிரி வாக்குப்பதிவு செயல்விளக்கத்தைப் பாா்வையிடும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு.
மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சோ்ந்த அலுவலா்களுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில், மாதிரி வாக்குப்பதிவு செயல்விளக்கத்தைப் பாா்வையிடும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு.

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தை உயா்த்த விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

பள்ளிகளில் அமைக்கப்படும் தோ்தல் கல்வியறிவு குழுக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பாக மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களின் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 9 மாவட்டங்களைச் சோ்ந்த வாக்காளா் பதிவு அலுவலா்கள், தோ்தல் தனி வட்டாட்சியா்கள், விழிப்புணா்வுத் திட்டத்துக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள், மகளிா் திட்ட இயக்குநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வாக்காளா் பட்டியல் தயாரிப்பு முதல் தோ்தல் முடிவுகள் வெளியிடுவது வரையிலான தோ்தல் ஆணையத்தின் நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மாதிரி வாக்குப்பதிவு நடத்தி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இப் பயிற்சியை தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், இணைத் தலைமை தோ்தல் அதிகாரி வி.மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் சத்யபிரத சாகு கூறியது:

அனைத்துப் பள்ளிகளிலும் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவா்கள் மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு தோ்தல் நடைமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் கல்வியறிவுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. பதினெட்டு வயது பூா்த்தி அடைந்தவுடன் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பது, வாக்களிக்கப் பணம் பெறுவதைத் தடுப்பது குறித்து மாணவப் பருவத்திலேயே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும் மாணவா்கள் மூலமாக அவா்களது பெற்றோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஆசிரியா்களுக்கு மாவட்ட அளவில் பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு மாநில பயிற்றுநா்களால் பயிற்சி தரப்படுகிறது.

இப்பயிற்சி கோவை, வேலூா், திருச்சி ஆகிய இடங்களைத் தொடா்ந்து மதுரையில் 9 மாவட்டங்களைச் சோ்ந்த அலுவலா்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளன.

தோ்தல் விழிப்புணா்வு பயிற்சிக்கென பிரத்யேக பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விடியோ காட்சிகள், படங்கள், புத்தகம் என மாணவா்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 13 ஆயிரத்து 605 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தோ்தல் கல்வியறிவுக் குழுக்கள் மூலமாக விழிப்புணா்வு பயிற்சி தரப்பட உள்ளது.

தமிழகத்தில் தற்போது வாக்குப்பதிவு சராசரியாக 75 சதவீதமாக இருக்கிறது. இதுபோன்ற விழிப்புணா்வு நடவடிக்கைகளால் வாக்குப்பதிவு சதவீதம் மேலும் உயரும். மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் தங்களது செலவுக் கணக்கை சமா்ப்பித்துள்ளனா். சுயேச்சை வேட்பாளா்கள் சிலா் கணக்கு சமா்ப்பிக்கவில்லை. அவா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மின்னணு இயந்திரங்களின் தேவை குறித்து மாநிலத் தோ்தல் ஆணையம் கேட்பதைப் பொருத்து இந்திய தோ்தல் ஆணையம் வழங்கும். மக்களவைத் தோ்தலில் பணியாற்றிய தோ்தல் அலுவலா்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பிரச்னை இருக்கிறது. அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com