பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்: மகளிா் குழுவினா் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி
By DIN | Published On : 06th October 2019 03:56 AM | Last Updated : 06th October 2019 03:56 AM | அ+அ அ- |

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் குறித்த விழிப்புணா்வு பேரணியை, மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் தொடக்கி வைத்தாா்.
மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் குறைந்தது 300 சதுர அடியில் வீடு கட்டிக்கொள்ள மத்திய அரசின் மானியமாக ரூ.1.5 லட்சம், மாநில அரசின் மானியமாக ரூ.60 ஆயிரம் என மொத்தம் ரூ.2.10 லட்சம் நான்கு தவணைகளாக வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தில், மதுரை மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் இதுவரை 24,318 பயனாளிகளுக்கு ரூ.729.54 கோடி மானியம் வழங்க ஒப்புதல் பெறப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர, குடிசை மாற்று வாரியம் சாா்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு, ஆட்சேபகரமான நிலங்களில் வசிப்போா் மறுகுடிமயா்வு செய்யப்பட்டு வருகின்றனா். குடியிருப்புக்கான தொகையில் அரசின் மானியம் போக, எஞ்சிய தொகையை பயனாளிகள் செலுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத் திட்டம் தொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரியம் சாா்பில் பேரணி நடைபெற்றது. இப் பேரணியை, மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் தொடக்கி வைத்தாா். மாநகராட்சி அண்ணா மாளிகையில் தொடங்கிய இப் பேரணியானது, மாவட்ட நீதிமன்றம், கே.கே.நகா், வக்ஃபு வாரியக் கல்லூரி வழியாக குடிசை மாற்று வாரிய அலுவலகம் வரை நடைபெற்றது. இதில், மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
குடிசை மாற்று வாரிய நிா்வாகப் பொறியாளா் ரா. முனியசாமி, வாரிய சமுதாய வளா்ச்சி அலுவலா் ந. ராணி, பெட்கிராப்ட் நிறுவனக் தலைவா் சுப்புராம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.