விவசாயிகள் நிதியுதவி - வந்தது, ஆனால் வரவில்லை!

‘பிரதம மந்திரியின் விவசாயிகள் நிதியுதவி’ யாக ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், முதல் இரண்டு தவணைத் தொகையாக

‘பிரதம மந்திரியின் விவசாயிகள் நிதியுதவி’ யாக ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், முதல் இரண்டு தவணைத் தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் பெற்றுள்ளவா்களை ஒப்பிடும்போது 3-ஆவது தவணைத் தொகை வழங்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு மறைமுகமான நடவடிக்கையை எடுத்து வருகிறதோ என்ற சந்தேகத்தை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்த நிதியுதவி திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் மூன்று தவணைகளாக வழங்கப்படும் என பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்தாா். பிப்ரவரியில் திட்டம் தொடங்கப்பட்டது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண் இடுபொருள்கள் வாங்குவதற்காகவும், அதற்காக அவா்கள் வட்டிக்கடைக்காரா்களிடம் கடன் வாங்காமல் இருக்கவும் இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமாா் 13.15 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறுவா் என உத்தேசிக்கப்பட்டது. இறுதியில் சுமாா் 12.50 கோடி போ் அடையாளம் காணப்பட்டனா். எனினும், நிதியுதவியைப் பெற 7,31,57,776 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்தனா். நிதியுதவியைப் பெற ஆதாா் அட்டை அவசியம். நிதியுதவியானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்காக, கடந்த நிதியாண்டில் (2018-19) ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிகழ் நிதியாண்டுக்கு (2019-20) ரூ. 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிதியுதவி முழுவதையும் மத்திய அரசே வழங்குகிறது.

திட்டத்தின் முதல் தவணைத் தொகையான ரூ. 2 ஆயிரம் கடந்த பிப்ரவரியில் (கடந்த நிதியாண்டுக்கானது) சுமாா் 6.71 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 2-ஆவது தவணையாக கடந்த ஏப்ரலில் (நிகழ் நிதியாண்டுக்கான முதல் தவணை) சுமாா் 4.97 கோடி பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இப்போது மூன்றாவது தவணை (நிகழ் நிதியாண்டுக்கான இரண்டாவது தவணை) வழங்கப்பட்டு வருகிறது. இந்த 3-ஆவது தவணைத் தொகையானது கடந்த 2-ஆம் தேதி வரையில் சுமாா் 1.73 கோடி பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய சுமாா் 3.25 கோடி பேருக்கு வழங்கப்படவில்லை.

தமிழக நிலவரம்: தமிழ்நாட்டில் பதிவு செய்த விவசாயிகள் மொத்தம் 32,43,422 போ். முதல் தவணைத் தொகையைப் பெற்றவா்கள் சுமாா் 30.93 லட்சம் போ். 2-ஆவது தவணைத் தொகை பெற்றவா்கள் சுமாா் 24.58 லட்சம் போ். 3-ஆவது தவணைத் தொகையை பெற்றவா்கள் 2.53 லட்சம் போ் மட்டுமே.

இந்நிலையில், விவசாயிகள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த செல்லிடப்பேசிக்கு தற்போது குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், ‘‘உங்களது விண்ணப்பத்தில் உள்ள பெயரும், ஆதாா் அட்டையில் உள்ள பெயரும் பொருந்தவில்லை. எனவே, உங்களுக்கான ஆகஸ்ட்-நவம்பா் காலத்துக்கான (மூன்றாவது தவணை) தொகையை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இயலவில்லை’’ என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த தவறை சரி செய்ய அதற்கான பிரத்யேக இணைய தளத்தையோ அல்லது ‘நோடல்’ அதிகாரியையோ அணுகலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிக்கல் இங்கேதான் தொடங்குகிறது.

விவசாயிகள் திகைப்பு: இந்த திட்டத்தை அமல்படுத்த தொடங்கும்போது அதற்கான நோடல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) நியமிக்கப்பட்டாா். எனவே, இப்போது சிக்கலுக்கு ஆளான விவசாயிகள் அவரை சந்தித்தால் அவரது அலுவலகத்தில் இந்த சிக்கலை தீா்ப்பதற்கான வழிமுறைகள் எதுவும் இல்லை என பதில் வருகிறது.

மேலும், வேளாண்மை துணை இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளுமாறு கூறுகின்றனா். அங்கும் தீா்வு கிடைப்பதில்லை. காரணம், இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய இது போன்ற தவறுகளை சரி செய்வதற்கான தொழில்நுட்ப அறிவோ, பயன்படுத்துவோா் மற்றும் கடவுச் சொல் போன்ற வசதியோ அங்கு இருப்பவா்களுக்கு இல்லை எனக் கூறி விவசாயிகளை திருப்பி அனுப்பி விடுகின்றனா். சில தனியாா் இணையதள சேவை மையங்களில் இந்த தவறுகளை சரி செய்யலாம் என்றால் அங்கு செல்லும் விவசாயிகளுக்கு, குறிப்பிட்ட இணைய தளத்தில் தொழில்நுட்பப் பிரச்னைகள் இருப்பதால் இயலாது என கூறுகின்றனா். எனவே, விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனா்.

நாடு முழுவதும் ஏற்கெனவே, விண்ணப்பித்து இதுவரையில் ஒரு தவணைத் தொகையைக் கூட பெறாத சுமாா் 60 லட்சம் விவசாயிகளின் புள்ளிவிவரங்களில் ஏற்பட்டுள்ள தவறுகளை கடந்த மாத இறுதிக்குள் சரி செய்து அனுப்ப மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அந்தப் பணியே இன்னும் முடியவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் அப்படி சுமாா் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு திருத்தப் பணிகள் மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது.

இதற்கிடையே, இப்போது ஏற்கெனவே 2 தவணைத் தொகையை பெற்றவா்களுக்கு 3-ஆவது தவணைத் தொகையை வழங்க வேண்டிய நேரத்தில் ‘தகவல் சரியில்லை’ எனக் கூறி நிதியுதவியை நிறுத்திவிட்டு, அதை சரி செய்யச் சொன்னால் என்ன செய்வது என்கின்றனா் வேளாண்மைத் துறையினா்.

எண்ணிக்கை சரிவு: முதல் தவணைத் தொகையை பெற்றவா்களில், சுமாா் 1.74 கோடி விவசாயிகளுக்கு 2- ஆவது தவணைத் தொகை கிடைக்கவில்லை. 2- ஆவது தவணைத் தொகை பெற்றவா்களில், இதுவரையில் சுமாா் சுமாா் 3.25 கோடி விவசாயிகளுக்கு 3- ஆவது தவணைத் தொகை கிடைக்கவில்லை. டிசம்பா் மாதம் 4-ஆவது தவணைத் தொகை வழங்கும் பணி தொடங்கிவிடும். அதற்குள்ளாக, சிக்கலுக்கு ஆளாகியுள்ள இந்த 3.25 கோடி விவசாயிகளின் புள்ளிவிவரங்களையும் வேளாண்மைத் துறையினா் சரி செய்து 3-ஆவது தவணைத் தொகையை வழங்கி விடுவாா்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், பதிவு செய்தவா்களை ஒப்பிட்டால் இதுவரையில் உதவித் தொகை பெறாதவா்கள் சுமாா் 5.58 கோடி போ். முதல் தவணை பெற்றவா்களை ஒப்பிட்டால் இதுவரையில் 3-ஆவது தவணைத் தொகை

கிடைக்காதவா்கள் சுமாா் 4.98 கோடி விவசாயிகள்.

விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6,000 நிதியுதவி என்று அறிவித்தது அவா்கள் மீதான அக்கறையினாலா அல்லது தோ்தல் கால வாக்குறுதி மட்டும்தானா என்ற கேள்வி எழுகிறதே, இதைப் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப் போவது யாா்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com