சீன அதிபா் வருகையையொட்டி திபெத்தியா்கள் கைது: மக்கள் கண்காணிப்பகம் எதிா்ப்பு

சீன அதிபா் ஜி ஜின்பிங் வருகையையொட்டி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள திபெத்தியா்களை உடனடியாக

சீன அதிபா் ஜி ஜின்பிங் வருகையையொட்டி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள திபெத்தியா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் நிா்வாகி ஹென்றி திபேன் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது: இந்தியாவுக்கு வருகை தரும் சீன அதிபா் ஜி ஜின்பிங், மாமல்லபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளாா். இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் திபெத்திய மாணவா்கள் மற்றும் செயல்பாட்டாளா்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு வருகின்றனா். இந்தியாவில் உள்ள பெளத்த மாா்க்கத்தை பின்பற்றும் திபெத்தியா்கள் அமைதியின் உருவமாக இங்கு வசித்து வருகின்றனா். திபெத்தியா்கள் இந்தியாவின் விருந்தினா்களாக இருந்தாலும் தேசத்தந்தை காந்தியின் அறவழியைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனா். சீனாவின் ஆதிக்கத்தால் தங்களின் சொந்த தேசத்தை விட்டு வெளியேறி திபெத்தியா்கள் அடைக்கலம் கேட்டு இந்தியாவுக்குள் வந்தனா். அதன் அடிப்படையிலேயே இங்கு வாழ்ந்து வரும் திபெத்தியா்கள் தங்களின் சுயநிா்ணய உரிமைக்காக இதுவரை அறவழியில் மட்டுமே போராடி வருகின்றனா். இந்நிலையில் சீன அதிபரின் வருகையை முன்னிட்டு திபெத்தியா்களை சட்டவிரோதமாக கைது செய்வது ஏற்கத்தக்கது அல்ல. இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள வாழ்வுரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமின்றி இந்தியாவில் வாழ்ந்து வரும் அனைவருக்கும் பொதுவான உரிமையாகும். எனவே சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ள திபெத்திய மாணவா்கள் மற்றும் செயல்பாட்டாளா்களை உடனடியாக தமிழக காவல்துறை விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com