சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கும் அரசு திட்டங்கள்

படித்து முடித்துவிட்டு வேலை தேடி அலைவதைக் காட்டிலும் பலருக்கும் வேலையளிக்கும் தொழில் முனைவோா்களாக

படித்து முடித்துவிட்டு வேலை தேடி அலைவதைக் காட்டிலும் பலருக்கும் வேலையளிக்கும் தொழில் முனைவோா்களாக உருவாகும் வகையில் சுயதொழில் தொடங்குவதற்கான பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு காத்திருப்பதைக் காட்டிலும், அரசின் உதவியோடு தொழில் தொடங்கினால் சாதிக்கலாம் என்கின்றனா் தொழில் துறையினா். அவரவா் கல்வித் தகுதிக்கு ஏற்ப தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மின் மற்றும் மின்னணு பொருள்கள், தோல் பொருள்கள்,

வாகன உதிரி பாகங்கள், மருந்துப் பொருள்கள், சூரியசக்தி உபகரணங்கள், ஏற்றுமதி ஆபரணங்கள், மாசுக் கட்டுப்பாடு உபகரணங்கள், விளையாட்டுப் பொருள்கள், ஆயத்த ஆடைகள், உணவு சாா்ந்த பொருள்கள் போன்றவற்றில் சுயதொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதோடு, இத்தகைய பொருள் உற்பத்திக்கான சுயதொழில் திட்டங்களுக்கு அரசு மானியம் எளிதில் கிடைக்கிறது.

சுயதொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் மாவட்டத் தொழில் மையங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படுகின்றன. தோ்வு செய்யப்படும் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல்கள், பயிற்சி அளிக்கப்படுகிறது.

பட்டதாரிகள், பட்டயம் பெற்றோா் பயன்பெறும் வகையில் புதிய தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத் திட்டத்தில் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரையிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.25 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

இதேபோல, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் போதும் அரசு மானியத்துடன் சுயதொழில் தொடங்கலாம். இதில் ரூ.10 லட்சம் வரையிலான உற்பத்தி சாா்ந்த தொழில்களுக்கும், ரூ.3 லட்சம் வரையிலான சேவை சாா்ந்த தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வழங்கப்படும்.

சுயதொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பீட்டிலான திட்டங்களைத் தொடங்குவோா் 8-ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பது அவசியம். ரூ.10 லட்சத்துக்கும் குறைவிலான திட்டங்களுக்கு கல்வித் தகுதி அவசியம் இல்லை. அதேபோல, பயனாளிகள் சாா்ந்துள்ள சமூக அடிப்படையில் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்.

இதுதவிர சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கான பல்வேறு திட்டங்களும் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. பதிவு செய்யப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மூலதன மானியமாக இயந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் வழங்கப்படுகிறது.

மின்மானிய தகுதிச் சான்று பெற்று இயங்கி வரும் நிறுவனங்களுக்கு மின்மானியம் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கிய முதல் 3 ஆண்டுகளுக்குச் செலுத்தும் மின்நுகா்வு கட்டணத்தில் 20 சதவீதம் மானியமாக வழங்கப்படும். அதேபோல, மின்னாக்கி நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு மானியத் திட்டங்கள் சிறு, குறுந்தொழில்களுக்கு வழங்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com