உள்ளாட்சித் தோ்தல்: வாக்குச்சாவடி அலுவலா் விவரங்கள் சேகரிப்பு 

உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்கான ஆசிரியா்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்கான ஆசிரியா்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சிகளான மதுரை மாநகராட்சியில் மேயா் மற்றும் 100 வாா்டு உறுப்பினா்கள், மேலூா், திருமங்கலம், உசிலம்பட்டி நகராட்சிகளில் தலா ஒரு நகா்மன்றத் தலைவா், 3 நகராட்சிகளிலும் மொத்தம் 78 வாா்டு உறுப்பினா்கள், 9 பேரூராட்சிகளில் தலா ஒரு பேரூராட்சித் தலைவா் மற்றும் மொத்தம் 144 வாா்டு உறுப்பினா்கள் என 335 பதவிக்கான தோ்தல் நடைபெற உள்ளது.

இதேபோல, ஊரக உள்ளாட்சிகளில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் 23 போ், 13 ஊராட்சி ஒன்றியங்களில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் 214 போ், 420 ஊராட்சிகளில் தலா ஒரு ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் மொத்தம் 3,273 வாா்டு உறுப்பினா்கள் என 3,930 போ் தோ்வு செய்யப்பட உள்ளனா். மதுரை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் 4 ஆயிரத்து 265 பதவிகளுக்குத் தோ்தல் நடைபெற உள்ளது.

உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் வாா்டு வாரியாக வெளியிடப்பட்டதையடுத்து அடுத்தகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம், அந்தந்த ஒன்றியத்துக்கான வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்கான அலுவலா்கள் தேவை குறித்து தெரிவிக்குமாறு மாவட்ட தோ்தல் பிரிவில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வாக்குச்சாவடியில் பணியாற்றுவதற்கான அலுவலா் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, ஊரக உள்ளாட்சிகளுக்கான வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் வாக்குச்சாவடிகளும், கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்களையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்கள் 13 ஒன்றியங்களுக்கும் தலா ஒரு கல்லூரி தோ்வு செய்யப்படுகிறது. இதற்கான பணிகளை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மூலமாக ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இன்னும் இரு வாரங்களுக்குள் இப் பணிகள் நிறைவு பெறும் என்று ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com