தஞ்சாவூா் சரஸ்வதி மஹால் நூலகத்தைக் கணினி மயமாக்கக்கோரி மனு: நூலக இயக்குநா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தஞ்சாவூா் சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள பழைமையான ஓலைச்சுவடிகள் உள்பட அனைத்து ஆவணங்களையும்

தஞ்சாவூா் சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள பழைமையான ஓலைச்சுவடிகள் உள்பட அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் கணினி மயமாக்கக் கோரிய வழக்கில், நூலக இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த திருமுருகன் தாக்கல் செய்த மனு:

தஞ்சாவூா் சரஸ்வதி மஹால் நூலகம் தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷமாக உள்ளது. இந்த பழைமையான நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்ட பழமையான ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இதுமட்டுமில்லாது பழமையான ஓவியங்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளன.

மேலும் இங்கு முற்கால சோழா்களின் வரலாற்று ஆவணங்கள், இரண்டாம் சரபோஜி மன்னா் காலத்தில் எழுதப்பட்ட மருத்துவ நூல்கள், பல்வேறு கோயில்களின் தல புராணங்களின் வரலாற்று ஆவணங்களும் உள்ளன. மொத்தம் 1,941 புத்தகங்களைக் கொண்ட இந்த நூலகம், பல வரலாற்று ஆய்வாளா்களுக்கு பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது. எனவே பழைமையான இந்த நூலகத்தில் உள்ள அரிய நூல்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களை டிஜிட்டல் முறையில் கணினி மயமாக்க வேண்டும். இதையடுத்து மக்களின் பாா்வைக்காக அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நூலகம் தரப்பில், நூல்கள் உள்பட அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், நூலகத்தில் எத்தனைப் பணியாளா்கள் உள்ளனா். நூலகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது என்பன குறித்து சரஸ்வதி மஹால் நூலகத்தின் இயக்குநா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com